முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வாக்காளர்கள் திருத்தம் செய்வோர் விண்ணப்பிக்கலாம்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.21 - திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்.24 அன்று வெளியிடப்படும் என்றும், புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த மார்ச் 26 அன்று வெளியிடப்பட்டது. மார்ச் 26 -க்கு பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது நடைபெற்றுவரும் தொடர் திருத்தத்தில் பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவற்றிற்கான துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2012-ன் வரைவு வாக்காளர் பட்டியலாக அக்.24 அன்று வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்படும். சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2012-ன் கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, நீக்கிட, திருத்தம், இடமாற்றம் செய்திட விரும்பும் நபர்கள் விண்ணப்பங்களை அக்.24 முதல் நவ.8 வரை சமர்ப்பிக்கலாம். அக்.30 மற்றும் நவ.6 ஆகிய இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும். விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (அதாவது வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள்) அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ (மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலகங்கள், மற்ற பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்) அல்லது நிர்ணியிக்கப்பட்ட அமைவிடங்களான வாக்குச்சாவடி நிலையங்களிலோ சமர்ப்பிக்கலாம். 

அக்.24 முதல் நவ.8 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது உரிய ஆணைகள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2012-ன் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு ஜன.5 வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கப்படும் இளைய வாக்காளர்களுக்குரிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான ஜன.25 அன்று வழங்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்