முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தின் அபார பந்துவீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்

சென்னை, மார்ச் -7  - இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இங்கிலாந்து பவுலர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி வெற்றிபெற்றது. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றுக்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதன் பி பிரிவு லீக் போட்டி ஒன்றில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்து அணி சந்தித்தது. இங்கிலாந்து அணி கடந்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஸ்ட்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஸ்ட்ராஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பீட்டர்சன் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில்  டிவில்லியர்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதே ஓவரின் கடைசி பந்திலேயே கெவின் பீட்டர்சனும் 2 ரன் எடுத்த நிலையில் ஜாக் காலிசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டாக 3 ரன்களில் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. அடுத்து ஜோனாதன் ட்ராட் மற்றும் இயான் பெல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இதிலும் பெல்லை மிகச் சிறப்பான முறையில் காட் அண்டு போல்டு முறையில் ஆட்டமிழக்கச்செய்தார் பீட்டர்சன். பெல் எடுத்த ரன்கள் 5 மட்டுமே. 15 ரன்களை எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. இந்நிலையில் ட்ராட்டுடன் ஜோடி சேர்ந்த ரவி பொப்பாரா இங்கிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 87 பந்துகளில் அரைசதம் கடந்தார் ட்ராட். அணியின் எண்ணிக்கை 114 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ட்ராட் 52 ரன்கள் எடுத்த நிலையில் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் ப்ரையர், ரவிபொப்பாராவுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் பொப்பாரா 87 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். அணியின் எண்ணிக்கை 134 க்கு உயர்ந்தபோது 10 ரன்களை அடித்திருந்த ப்ரையர், வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலின் பந்தில் கீப்பர் வான்விக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார்.  இங்கிலாந்து அணியின் மொத்த ரன்கள் 148 ஐ எட்டியபோது 60 ரன்கள் அடித்திருந்த பொப்பாரா, மோர்கெலின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 45.4 ஓவர்களில் 171 ரன்களையே எடுத்த  இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆண்டர்சன் ஆட்டமிழக்காமல் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மோர்கெல் 2 விக்கெட்டுகளையும்,  ஸ்டெயின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
172 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆம்லா மற்றும் ஸ்மித் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். அணியின் எண்ணிக்கை 63 ஐ எட்டியபோது 22 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், சுழல்பந்து வீச்சாளர் ஸ்வானின் பந்தில் விக்கெட் கீப்பர் ப்ரையரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில்  அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஆம்லாவை கிளீன்போல்டாக்கினார் ஸ்டூவர்ட் பிராட். ஆம்லா எடுத்த ரன்கள் 42.  அடுத்து டிவில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 82 க்கு உயர்ந்தபோது 15 ரன்களை எடுத்திருந்த காலிஸ், ப்ராடின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். இதன் பிறகு தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிவிலியர்ஸ் மற்றும் ப்ளெஸ்ஸிஸ் ஆகியோர்  ரன் சேர்க்க திணற ஆரம்பித்தனர். 25 ரன்களில் 100 ரன்களை கடந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 7 ஓவர்களில் வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனால் அதற்குள் மேலும் ஒரு விக்கெட்டையும் இழந்தது. 25 ரன்களை எடுத்திருந்த வில்லியர்ஸ், ஆண்டர்சனின் வேகத்தில் வீழ்ந்தார். இதே ஸ்கோரிலேயே ப்ளெஸ்ஸிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து டுமினி ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆண்டர்சனின் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. எளிய ஸ்கோரை தென் ஆப்பிரிக்கா எட்டுமா என்ற கேள்வி எழுந்துவிட்டது. அணியின் எண்ணிக்கை 127 ஆனபோது பீட்டர்சன் 16 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் யார்டி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வான்விக்குடன் ஜோடி சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். அணியின் எண்ணிக்கை 160 ஐ எட்டியபோது 37 பந்துகளில் 13 ரன்களை எடுத்திருந்த வான்விக் விக்கெட்டை பறித்தார் வேகப்பந்து வீச்சாளர் ப்ரேஸ்னன். அடுத்து 4 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி ஸ்டெயினின் விக்கெட்டையும் இழந்தது. ஸ்டெயின் 20 ரன்களை எடுத்த நிலையில் ப்ராடின் பந்தில் விக்கெட் முன் கால் என்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மோர்னே மோர்கெல் 1 ரன் எடுத்த நிலையில் ப்ராடின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ப்ரையரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால்  தென் ஆப்பிரிக்க அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களை மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் இம்ரான்தாஹிர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தும் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மிகச் சிறப்பாக பந்துவீசி 6.4 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், யார்டி, ப்ரேஸ்னன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். கடந்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த இங்கிலாந்து அணி பலம்பொருந்திய அணியாக கணிக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி பி பிரிவில் தனது நிலையை தக்கவைத்துக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony