முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பிரச்சினை: மத்திய அமைச்சர் பேட்டி

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, செப்.22 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து பிரதமரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவேன் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார் இதுகுறித்த விவரம் வருமாறு. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யநாட்டு உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள 2 அணுமின் உலைகளில் ஒன்றின் பணி முழுமையாக முடிவடைந்து பின் உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டது.  ஆனால் இதற்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல் நெல்லை மற்றும் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்று சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் சார்பில் 127 பேர் இடிந்தகறை என்ற இடத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். 

    

இந்த உண்ணாவிரத பிரச்சனை குறித்தும், பொது மக்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்ககோரி, கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதிஇருந்தார்.  அன்று மாலையே முதல்வர் ஜெயலலிதாவிடம் பிரதமர் கூடங்குளம் பிரச்சினை குறித்து தொலைபேசி மூலம் பேசி, தனது சார்பில் கூடங்குளத்திற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமியை அனுப்பிவைப்பதகவும், அங்கு சென்று வந்தபின்பு, முதல்வரிடம் நாராயணசாமி பேசுவார் என்றும், தமிழக முதல்வரிடம் உறுதி அளித்திருந்தார் .  

 

முதல்வர் ஜெயலலிதாவிடம் உறுதி அளித்த அடிபடையில் பிரதமர் மன்மோகன்சிங் தனது தூதுவராக மத்திய அமைச்சர் நாராயணசாமியை நேற்று முன் தினம் அனுப்பி வைத்திருந்தார்.  சென்னையில்  

நேற்று முன்தினம் தலைமை செயலாளரை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசிய பின் கூடங்குளம் சென்று உண்ணாவிரதம் இருந்த மக்களை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று காலை சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார். 

 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

பிரதமரின் உத்தரவின் பேரில் நான் கூடங்குளம் சென்று உண்ணாவிரதம் இருந்த பொது மக்களை சந்தித்து பேசினேன். பின்னர் கூடங்குளம் பிரச்சினை குறித்து இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். முதல்வர் ஜெயலலிதாவும் தனது கருத்தை என்னிடம் தெரிவித்து பிரதமரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இடிந்தகரையில் போராட்டம் நடத்தும் போராட்டக் குழுவினரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தினார்கள். நான் பிரதமரின் தூதுவராக வந்துள்ளேன். பிரதமர் என்னிடம் கூறிய கருத்தை முதல்வரிடம் தெரிவித்தேன். இந்த பிரச்சினை குறித்து பிரதமர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.ஜெயின், கல்பாக்கம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் காசிநாதபாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்