முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.17-19 தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி மன்ற தேர்தல்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.22 - தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்.17 மற்றும் 19 தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அக்டோபரில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து பல்வேறு கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார்நிலையில் இருந்தனர். அனைத்து கட்சிகளை விட அ.தி.மு.க.தான் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள முன்னிலை வகித்து கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றதும் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து களம் காண தயார் நிலையில் உள்ளது.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அ.தி.மு.க. சார்பில் 10 மேயர் பதவிகளுக்கும், 124 நகராட்சி தலைவர் பதவிகளுக்கும், 529 பேரூராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களின் வேட்பாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பணிகளை வேகமாக துவங்கியுள்ளனர். வாக்காளர்களின் புகைப்படத்துடன் இறுதி வரைவு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

தமிழக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-

உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமான அக்.17-ந் தேதியன்று 9 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அக்.19-ந்தேதியன்று 2வது கட்ட தேர்தல் 65 நகராட்சிகளுக்கும், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கும்  தேர்தல் நடைபெறவுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனு தாக்கல் வருகின்ற செப்டம்பர் 22-ந் தேதி துவங்குகின்றது. வேட்புமனு தாக்கல் செய்ய 29-ந் தேதி கடைசி நாளாகும். 30-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 3-ந் தேதி வேட்புமனுக்களை  திரும்ப பெற கடைசி நாளாகும்.    

அக்டோபர் 21-ந் தேதியன்று அனைத்து வாக்குகளும் எண்ணப்படும். அக்டோபர் 24-ந் தேதியன்று வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும். வார்டு உறுப்பினர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 25-ந் தேதியன்று பதவியேற்றுக்கொள்வார்கள். துணை மேயர் மற்றும் மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் பணி அக்டோபர் 29-ந் தேதி அன்று நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகளுக்கு மாவட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ஆணையர் தேர்தல் அதிகாரியாக இருப்பார். மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் அதிகாரியாக இருப்பார்கள். 

2006-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய வன்முறையை இப்பொழுது நடக்காது. சுமூகமாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும். மாநாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவும், மற்ற பகுதிகளுக்கு ஓட்டுசீட்டு முறை பயன்படுத்தப்படும். மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சித் தலைவர்கள் ஆகியோர்களுக்கு தனி மின்னணு இயந்திரமும், மற்ற பதவிகளுக்கு தனி மின்னணு இயந்திரமும் வைக்கப்படும். வாக்காளர்களுக்கு அரசு அலுவலர்கள் பூத் ஸ்லிப்பை புகைப்படத்துடன் வழங்குவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்