முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் உண்ணாவிரதம் கைவிடப் படுவதாக அறிவிப்பு

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளை ஏற்று, உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்க்கு 19.9.11 அன்று ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், தமிழக அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இந்த பிரச்சனையில் ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பாரதப் பிரதமரை சந்தித்து, ஒரு கோரிக்கை மனுவை அளிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். 

மேலும், இந்த பிரச்சனையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்களும் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டார்.

அந்தக் கடிதத்தை படித்த பின், பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அன்று (19.9.11) மாலையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கூடங்குளம்  அணுமின் நிலையப் பிரச்சனை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர், நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

அதனை அடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று முன்தினம் தமிழகம் வந்து தலைமை செயலாளரை சந்தித்தபின், இடிந்தகரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்தார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வரை நேற்று தலைமை செயலகத்தில், பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி சந்தித்தார். அப்போது இடிந்தகரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தான் சந்தித்தது பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறினார். இந்த சந்திப்பின் போது இந்திய அணுமின் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், எஸ்.கே.ஜெயின், மத்திய அரசு அணுமின்சக்தித்துறையின் கூடுதல் செயலாளர் ஏ.பி.ஜோஷி மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் எம்.காசிநாத் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர், இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த கோரிக்கையை ஏற்று இன்று (22.9.11) தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என்றும், கூடங்குளம் பகுதியிலுள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும், பாரதப் பிரதமர் நியூயார்க்கிலிருந்து 27.9.11 அன்று திரும்பிய பிறகு, அவரை சந்திப்பதற்கு வசதியான நாளை பெற்று, தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகக்குழு புதுடில்லிக்கு சென்று பாரதப் பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கும் என்றும், பிரமதர் இந்தியா திரும்பிய பின், பாரதப் பிரதமருடன்  தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப, தற்போது இடிந்தகரையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக கைவிடுவதாக போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, கோட்டார் பேராயர் பீட்டர் ரெமிஜியஸ், தூத்துக்குடி பேராயர் டாக்டர் யுவான் அம்புரோஸ், பாலபிரஜாபதி அடிகள், அருள்தந்தை எக்ஸ்.டி.செல்வராஜ், தந்தை ஜெயகுமார், தந்தை ஹென்சன், லுட்வின், ஞானசேகர், எஸ்.பி.உதயகுமார், சிவசுப்பிரமணியன், புஷ்பராயன், பேராயர் ஜே.ஏ.டி. ஜெபசந்திரன், தூத்துக்குடி பேராயர் கிறிஸ்துதாஸ், ஜேசன் செல்வகுமார், தமிழ்செல்வன், தனசீலன், இர்வின் சார்லஸ், ஜோசப் நாஞ்சில் மைக்கேல், த.வெள்ளையன், சாமுவேல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சமால், கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைசச்ர் பி.செந்தூர்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்