முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுடன் போராடி கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை ஏற்று கூடங்குளம் பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர். 127 பேர் தங்களை வருத்திக்கொண்டு நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது.

கூடங்குளம் பகுதி மக்கள் தமிழக முதல்வரை நம்பித்தான் தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர்களின் பிரதிநிதியாக தமிழக முதல்வர் செயல்பட்டு, மத்திய அரசுடன் போராடி கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசும், போராட்டக்குழுவினரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பா.ம.க. அதன் முழு ஆதரவை அளிக்கும்.

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்