முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலந்தூர் நீர்பகிர்மான நிலையத்திலிருந்து குடிநீர் சப்ளை

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.23 - உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி பகுதிகள் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களாகிய ண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம் மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய குடிநீர் ஆதாரங்களில் இருந்து சென்னை மாநகர், தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு, நாள் ஒன்றுக்கு 790 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.  

இதில், ஆலந்தூர் நீர் பகிர்மான நிலையத்தில் இருந்து தென் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 18.75 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  பல்லாவரம் நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, பொழிச்சலூர் கிராம ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆலந்தூர் நீர் பகிர்மான நிலையத்தில் இருந்து கூடுதல் குடி நீர் வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  தற்போது சென்னை மாநகரக் குடிநீர் ஆதார ஏரிகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், பல்லாவரம் நகராட்சிக்கு 2.50 மில்லியன் லிட்டர், பம்மல் நகராட்சிக்கு 0.20 மில்லியன் லிட்டர், அனகாபுத்தூர் நகராட்சிக்கு 0.90 மில்லியன் லிட்டர், பொழிச்சலூர் கிராம ஊராட்சிக்கு 0.40 மில்லியன் லிட்டர், ஆக மொத்தம் 4 மில்லியன் லிட்டர் குடிநீர் நாள் ஒன்றுக்கு  கூடுதலாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இதேபோன்று பெருங்குடி நகரப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, பெருங்குடி நகரப் பஞ்சாயத்துக்கு நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் குடிநீர் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள குடிநீர் வழங்கும் அமைப்பில் இருந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்