முக்கிய செய்திகள்

ஹசாரேவின் போராட்டத்திற்கு அதிபர் ஒபாமா பாராட்டு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப்.23 - ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பிரபல சமூக சேவகர், காந்தீயவாதி அன்னா ஹசாரே தனது போராட்டத்தில் வெற்றிபெற்றார். இவரது ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளன. நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 66 வது வருடாந்திர கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், உலக மக்கள் சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வாழவே விரும்புகிறார்கள். அந்த வகையில் தற்போது மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் சுதந்திரக்காற்று வீசிவருகிறது என்றார். 

அரசியலில் மாற்றம் வேண்டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பிரச்சாரங்களை முன்னின்று நடத்துபவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன் என்று பாரக் ஒபாமா கூறினார். இந்தியாவில்  ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய சமூக சேவகர் அன்னா ஹசாரேவைத்தான் ஒபாமா பெயரிட்டு கூறாமல் பாராட்டி இருக்கிறார். டெல்லி முதல் வார்சா வரை உலகம் முழுவதும் அஹிம்சை ரீதியில் இதுபோன்ற போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். ஹசாரேவின் அமைதியான போராட்டத்தை அமெரிக்க அதிபர் வெகுவாக பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: