முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்துடன் திறந்த மனதுடன் பேச தயார்: சாண்டி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.24 - முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். தேனி, திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. ஆனால் இந்த அணை பழமையானது என்றும் பழுதடைந்துவிட்டது என்றும் கூறி அதை இடித்துவிட்டு புதிய அணையை கட்டும் முயற்சியில் கேரள மாநிலம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்தநிலையில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில் முல்லைப்பெரியாறு குறுக்கே அணை கட்ட கேரள அரசு விரும்புகிறது. ஞுஇந்த பிரச்சினை தொடர்பாக தமிழகத்துடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் தருவோம் என்று உறுதியாக கூறுகிறேன். அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தண்ணீர் அவசிய தேவையாக இருக்கிறது. அதேசமயத்தில் எங்கள் மாநில மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட நாங்கள் விரும்புகிறோம். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வரும்படி தமிழகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கேரளாவில் இருந்து தண்ணீர் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற சந்தேகம் இருந்தால் அதற்கு தீர்வுகாண நாங்கள் தயாராக இருக்கிறோம். 

முல்லைப்பெரியாறு பிரச்சினையால் கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி பற்றி கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதுதான் எங்கள் கோஷம். அதேசமயத்தில் கேரளாவுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதும் எங்கள் கோஷமாகும். தமிழகத்திற்கு தண்ணீர் தேவை எவ்வளவு முக்கியம் என்பதும் எங்களுக்கு தெரியும். முல்லைப்பெரியாறில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். அது பற்றி எங்களுக்கு தெரியும். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் தமிழகத்துடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். தமிழகத்திற்கு உறுதியாக தண்ணீர் கொடுப்போம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பெரியாறு அணை கட்டப்பட்டு 117 ஆண்டுகளாகிறது. பழைய தொழில்நுட்ப முறையை வைத்து கட்டப்பட்ட அணையாகும். முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டப்படுவதால் நலன்கள் பாதிக்கப்படும் என்று தமிழகம் கருதுகிறது. இதுவும் நியாயமானதே என்றும் உம்மன் சாண்டி மேலும் கூறினார். 

இதற்கிடையில் புதிய அணை கட்டுவது தொடர்பாக அனைத்து விபரத்தையும் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை இடிக்கப்படுவதற்கு முன்பு அந்த அணையில் உள்ள தண்ணீரை எப்படி வெளியேற்றுவது தொடர்பாகவும் அறிக்கை சமர்ப்பிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள அரசு வெறு வாயில் பந்தல் போடலாம் என்று நினைக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்