முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: கருத்து சொல்ல பிரணாப் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.25 - 2 ஜி ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து தான் அமெரிக்காவில் கருத்து கூற முடியாது என்றும் தான் இந்தியா திரும்பிய பிறகுதான் அது குறித்து கருத்து கூற முடியும் என்றும் வாஷிங்டனில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு பிரணாப் முகர்ஜியை இந்திய பத்திரிகையாளர்கள் சிலர் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பிரணாப் முகர்ஜி தான் இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த கேள்விகளுக்கு இப்போது இங்கே ( அமெரிக்காவில் ) பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் தான் தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு இது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்றும் பிரணாப்  தெரிவித்தார்.

வாஷிங்டன் சென்றுள்ள பிரணாப் முகர்ஜி நியூயார்க் செல்ல திட்ட மிட்டுள்ளார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.  இதற்காக தனது வாஷிங்டன் பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக்கொண்டு அவர் நேற்று நியூயார்க் புறப்பட்டு சென்றார். 

பிரணாப் நியூயார்க் செல்வது அவரது சுற்றுப்பயண அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காகவே பிரணாப் நியூயார்க் செல்ல இருக்கிறார். 

மன்மோகன் சிங் தங்கியிருக்கும் அதே ஓட்டலில்தான் பிரணாப்பும்  தங்க போகிறார்.

மேலும் நியூயார்க்கில் கிட்டத்தட்ட 9 இந்திய அமைச்சர்கள் குவிந்துள்ளனர். எனவே நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு குட்டி அமைச்சரவை கூட்டத்தையே கூட்டி விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அந்த குட்டி அமைச்சரவை கூட்டத்தில் பிரணாப் முகர்ஜியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: