முக்கிய செய்திகள்

உள்நாட்டு விவகாரங்களில் அன்னிய தலையீடு கூடாது அமெரிக்காவுக்கு பிரதமர் மறைமுக கண்டனம்!

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க்,செப்.- 26 - சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும். தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டு விட வேண்டும். வெளியில் இருந்து ராணுவ தாக்குதல் மூலம் ஒரு நாட்டை கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 65 வது ஆண்டு பொது சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார். இது பற்றி அவர் பேசியதாவது,  ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுநதால் அங்கு சுமூகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும், ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேச சமூகத்திற்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று வெளியில் இருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாக தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திர தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றம் வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். வளர்ச்சிக்குற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும், அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம். முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நம்மிடையே புதிய உறுப்பினராக பங்கேற்கும் தெற்கு சூடானுக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். உலக பொருளாதாரத்திற்கே உந்து சக்தியாக விளங்கும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இப்போது வெவ்வேறு காரணங்களால் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதனாலேயே சர்வதேச அளவில் மூலதன சந்தையிலும் பங்கு சந்தைகளிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. 

இதனால் வளரும் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம். அவை சர்வதேச சந்தைகளில் காணப்படும் நிலைமைகளால் உற்பத்தி இழப்பு, வேலையிழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றை தாங்கியாக வேண்டும். அத்துடன் உள்நாட்டில் நிலவும் பணவீக்க விகித அதிகரிப்பால் உயர்ந்து வரும் விலைவாசியையும் சமாளித்தாக வேண்டும். தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்வாலும் உலக நாடுகள் அனைத்துமே பாதிப்படைந்து வருகின்றன. வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் இப்போது எல்லா நாடுகளிலுமே அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலை உயர்வாலும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள், காய்கறிகளின் விலை உயர்வாலும் எல்லா நாடுகளிலுமே அவர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் என்றார் பிரதமர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: