முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய-மாநில தேர்தல் பணியில் அரசு இயந்திரத்தை பயன்படுத்த கூடாது- தமிழக தேர்தல் கமிஷனர்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 7  - மத்திய- மாநில அமைச்சர்கள் தேர்தல் பணியில்  அரசு இயந்திரத்தை பயன்படுத்த கூடாது என்று  தேர்தல் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகிற ஏப்ரல் 13-ந் தேதியன்று தமிழகம், புதுச்சேரி,கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 19-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நன்னடத்தை விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி அலுவல் ரீதியாக மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்வி மைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி சென்னைக்கு வந்தார். அதனை தொடர்ந்து தனது தொகுதியான மதுரைக்கு 4-ந் தேதி அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து நன்னடத்தை விதிகளை மீறியுள்ளதாக கூறி மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தவறாமல் கீழ்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.  அவை வருமாறு:
மத்திய, மாநில அமைச்சர்கள் அரசு முறை பயணமாக வரும்போது தேர்தல் பணிகளை செய்ய கூடாது. அதற்காக அரசு கார்களையோ, அரசு ஊழியர்களையோ பயன்படுத்தக் கூடாது. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட பயணமாகவும் வரும்போது மத்திய அமைச்சர்கள் அரசு அதிகாரிகளை பயன்படுத்த வேண்டுமானால் அவர்கள் தலைமை செயலாளர் மற்றும் இந்திய அரசு துறை செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும். அரசு பயணமாக வரும்போது, சொந்த வேலைகளுக்கும் மற்றும் அரசியல் பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. மாநில அமைச்சர்கள் எந்தவொரு அரசு பணிகளை தேர்தல் நேரத்தில் செய்ய கூடாது. அதோடு அரசு கார்களையொ பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அமைச்சர்கள் வருகையின்போது அவரது நிகழ்ச்சிகளை தேர்தல் கமிஷன் வீடியோ எடுக்கும். மேலும், கார்களில் அமைச்சர்கள் சிவப்பு விளக்குகளை பொருத்த கூடாது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்