முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல்: நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட ராசாவே காரணம்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, - 7 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய  அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே காரணம் என்று மத்திய கணக்கு தணிக்கை குழு வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் வெளியிட்டார்.  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.  

கடந்த 2008-ம் ஆண்டு இரண்டாம் தலைமுறைக்கான 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின் போது மிகவும் மலிவான கட்டணத்திற்கு தொலை தொடர்பு கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக ஏற்கனவே இவர் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கை குழுவும் இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியது. 

ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்த மத்திய கணக்கு தணிக்கை குழு பின்னர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு  ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே தனிப்பட்ட பொறுப்பு வகிக்கிறார் என்று அந்த இறுதி அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஆலோசனையையும்  மத்திய சட்டத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய  ஆலோசனைகளையும் தொலைத் தொடர்பு கமிஷனின்  பரிந்துரைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த கட்டணத்தில் (அடிமாட்டு விலைக்கு) ஆ.ராசா ஒதுக்கீடு  செய்திருக்கிறார் என்றும் இந்த இழப்பீட்டுக்கு தனிப்பட்ட முறையில் ராசாவே பொறுப்பு என்றும் மத்திய கணக்கு தணிக்கை குழு தனது இறுதி அறிக்கையில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டில் ராசா தனிப்பட்ட  முறையில் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்யும் கோப்புகளையும் இந்த இறுதி அறிக்கையில் மத்திய கணக்கு தணிக்கை குழு இணைத்துள்ளது.

இந்த இழப்பீட்டு விவகார விஷயத்தில் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயையும்  இக்குழு விட்டு வைக்கவில்லை. அந்த ஆணையத்தையும் இக்குழு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தனது பரிந்துரைகள் அலட்சியப்படுத்தப்பட்டோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டோ வருகிறது  என்பது தெரிந்தும் கூட டிராய் தனது கைகளை கட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது என்றும் அந்த இறுதி  அறிக்கையில் தணிக்கை குழு குற்றம்சாட்டியுள்ளது.

மொத்தம் வழங்கப்பட்ட 122 புதிய லைசென்சுகளில் 85 லைசென்சுகள் 12 கம்பெனிகளுக்கு  கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளில் பல கம்பெனிகள் தொலை தொடர்பு துறையின் வரையறுக்கப்பட்ட தகுதிகளைக்கூட பெறவில்லை. ஆனால் அவற்றுக்கும் 2 ஜி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை 3 விதமான ஆய்வுகளை நடத்தி தணிக்கை குழு மதிப்பீடு செய்துள்ளது.

முதலாவது முறையில் மதிப்பீடு செய்ததில் 122 லைசென்சுகளுக்கு 6.2 மெஹா ஹெர்ட்ஸ் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக கோரப்பட்ட தொகை ரூ. 65,725 கோடி. ஆனால் தொலை தொடர்பு துறை வசூலித்த தொகை வெறும் ரூ. 9,013 கோடி. 

இரண்டாவது முறைப்படி 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு ஒதுக்கீட்டு ஏலத் தொகைக்கும் 2ஜி ஏலத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் கண்டறியப்பட்டது. அதன்படி பார்த்தால் 2ஜி ஒதுக்கீட்டிற்கு ரூ. 1,11,511 கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் தொலை தொடர்பு துறை பெற்றது வெறும் ரூ.9,013 கோடி. இரட்டை தொழில்நுட்ப லைசென்சுக்கு ரூ. 40,526 கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரட்டை தொழில்நுட்ப ஒதுக்கீட்டிற்கு தொலை தொடர்பு துறைக்கு கிடைத்தது வெறும் ரூ. 3,372 கோடி மட்டுமே. 

மேற்கண்ட இரு  மதிப்பீட்டு முறைகளின்படி பார்த்தால் அரசு கஜானாவுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1,39,652 கோடி.

மூன்றாவதாக சில கம்பெனிகளுக்கு 6.2 மெஹா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்கும் மேல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதையும்  சேர்த்து மொத்தமாக பார்த்தால் அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ. 1,76,379 கோடி என்று அந்த இறுதி  அறிக்கையில் புள்ளி விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2 ஜி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பலவீனமான நடைமுறைகளுக்கு  கணக்கு தணிக்கை குழு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. 

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை ராசா எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார் என்றும் கணக்கு தணிக்கை குழு கேள்வி எழுப்பியுள்ளது.

எவ்வளவு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவை எவ்வளவு  உள்ளது என்பதை கண்டறியாமல் இந்த 2ஜி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2 ஜி ஏலம் தொடர்பாக கடந்த 2007 நவம்பர் மாதம்  மந்திரி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த ஒதுக்கீடுகளை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் நுழைவுக்கட்டணத்தை மாற்றி அமைக்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார்.  அதற்கு ராசா பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை போதுமான அளவுக்கு இருக்கிறது என்றும் அதனால் புதிதாக வருபவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என்றும் ராசா பதில் கடிதத்தில்  கூறியுள்ளார்.

இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே சரியான நடைமுறைகளை பின்பற்றாமல்  தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளன என்றும்  இதற்கெல்லாம் ராசாவே காரணம் என்றும் கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகே ராசா பதவி விலகினார். தற்போது அவர் திஹார் சிறையில் உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony