முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை தேர்தல் கமிஷனர் குழுவில் எதிர்க்கட்சியும் இடம்பெற வேண்டும்-அத்வானி

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 7- ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனக்குழுவில் உள்ளதைப் போல தலைமை தேர்தல் கமிஷனர் நியமனக்குழுவிலும் எதிர்க்கட்சி இடம் பெற வேண்டும் என்று மூத்த பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி  கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறுகையில் கடந்த 1998-ம் ஆண்டு அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா, நீதிபதிகள்  எஸ்.பி. பரூச்சா, எஸ்.சி.சென் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த ஒரு உத்தரவில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்திற்கான தேர்வு  குழுவில் பிரதமர், உள்துறை செயலாளர்,  லோக் சபை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெற்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அதன்படி தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையர் இந்த 3 பேரும் அடங்கிய தேர்வு குழுவினால்தான் நியமனம் செய்யப்படுகிறார்.

சமீபத்தில் கூட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டு  பிறகு அவர் ஊழல்  வழக்கில் தொடர்பு உள்ளவர் என்று கூறி பெரும்  சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து அவரும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவரது நியமனத்தின்போது லோக் சபை எதிர்க்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ் தனது கடுமையான ஆட்சேபணையை தெரிவித்திருந்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் பி.ஜே. தாமஸ் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு  ஒரு  தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்  தலைமை தகவல் ஆணையர் என்பவர் பிரதமர், சட்ட அமைச்சர், எதிர்க்கட்சி  தலைவர் ஆகியோரால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த குழுவில் உள்துறை அமைச்சருக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்போது தலைமை தேர்தல் கமிஷனரை நியமனம் செய்யும் குழுவில் எதிர்க்கட்சியை சேர்க்க வேண்டும் என்று அத்வானி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிப்படை தன்மையை பராமரிக்க தலைமை தேர்தல் கமிஷனர் நியமனக்குழுவில்  எதிர்க்கட்சியும் இடம் பெற வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்