முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தல்: மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 29 - தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேயர் பதவிக்கு 17 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே புதிய தேர்தல் நடத்தப்படவுள்ளது. வரும் 17 மற்றும் 19 ஆகிய நாட்களில் ஓட்டுப் பதிவு நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய அமைப்புகளில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகிய அமைப்புகளுக்கான தேர்தலில் ஓட்டுச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் திருச்சியை தவிர மற்ற மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 125 நகராட்சிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதே போல் மற்ற அமைப்புகளுக்கும் முழுமையாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த அமைப்புகளில் தலைவர், உறுப்பினர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகள் உள்ளன. இவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ம் தேதி தொடங்கியது.  முதல் நாளில் 1,086 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2 வது நாளில் இருந்து மனுத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 622 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 391 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 10,958 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 7,869 பேரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் கிராமப்புறங்களில் உள்ள பதவிகளுக்கு ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 461 பேரும், நகர்ப்புற பதவிகளுக்கு 22,930 பேரும் மனு செய்துள்ளனர். மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். ஆகையால் மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகக் கூடும்.  இதுவரை அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு செய்துள்ளனர். தே.மு.தி.க, கம்யூனிஸ்டு கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் இனிமேல்தான் மனு தாக்கல் செய்வர். இது தவிர, மற்ற கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்ய இருக்கின்றார்கள். காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம்தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. ஆகவே வேட்பு மனுத்தாக்கல் அதிகளவில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை மேயர் பதவிக்கான தேர்தல் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதவிக்கு நேற்று முன்தினம் வரை 17 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் அ.தி.மு.க வேட்பாளர் சைதை துரைச்சாமி, தி.மு.க. வேட்பாளர் மா. சுப்பிரமணியன், தே.மு.தி.க. வேட்பாளர் ஜி. வேல்முருகன், ம.தி.மு.க. வேட்பாளர் என். மனோகரன் ஆகியோரும் அடங்குவர். காங்கிரஸ் வேட்பாளராக இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மட்டும் 10 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் இதுவரை 6 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பா, தி.மு.க வேட்பாளர் பாக்கியநாதன், தே.மு.தி.க. வேட்பாளர் கவியரசு, சுயேட்சை வேட்பாளர்களாக திருநங்கை பாரதி கண்ணம்மா, ஆரோக்கிய ஸ்டீபன், ஆர்.எஸ். ராசு ஆகியோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்