முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள்தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமி மீது மேலும் 3 வழக்குகள் பதிவு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.- 29 - மீனவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது  செய்யப்பட்டு சிறையில் உள்ள கே.பி.பி.சாமி மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 கொலை வழக்குகள் நான்கு வழக்குகள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் கே.பி.பி.சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.பி.சாமி. இவர் 2006-ம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று அமைச்சரானார். அமைச்சரானவுடன் தனது அதிகாரப் பலத்தை பயன்படுத்தி தன்னை எதிர்த்தவர்களை அடியாட்களை வைத்து தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவரது தம்பி கே.பி.பி.சங்கர் சுனாமி நிதியை முறைகேடாக அபகரித்ததை எதிர்த்து வழக்கு போட்டார்கள். இதற்கு சாட்சியாக செல்லத்துரை என்ற மீனவர் சேர்க்கப்பட்டார். அவரை 2008-ம் ஆண்டு சாமியின் அடியாட்கள் கடத்தினர். அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியாது. அவரை கண்டுபிடித்து தர ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டது. இதனிடையே காணாமல் போன மீனவர் செல்லத்துரையின் மனைவி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் தன் கவணவரை கடத்தி கொன்றது அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஆட்கள் தான் என்று அதற்கு சாட்சியாக சிலபேரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேகொலை வழக்குக்காக கே.பி.பி.சாமியின் தம்பிகள் கே.பி.பி.சங்கர், கே.பி.பி.சொக்கலிங்கம் மற்றும் யோபு, டைசன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையிலும், செல்லதுரையின் மனைவி புகாரின் பேரிலும் கே.பி.பி.சாமியை போலீசார் கைது செய்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பு கே.பி.பி.சாமியை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் பலதகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மீனவர் செல்லதுரை தவிர மற்றொரு மீனவர் வேலுவும் கே.பி.பி.சாமியின் ஆட்களால் கடத்தி கொலை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் கே.பி.பி.சாமிக்கு சொந்தமான காரில் கடத்தியது தெரியவந்ததுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை வேலூரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சாமி விற்று விட்டதாக தெரியவந்துள்ளது. காரை பறிமுதல் செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர். இதேபோல் கே.பி.பி.சாமியின் அடியாட்கள் டைசன், யோபு ஆகியோரும் மீனவர் வேலு கடத்தி கொல்லப்பட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது. தற்போது மீனவர் வேலு கடத்தி கொல்லப்பட்ட வழக்கும், ஸ்டண்ட் நடிகர் பரணிகுமார் என்பவரை தாக்கி காயப்படுத்தி 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து கடலில் தூக்கி வீசிய வழக்கும் கே.பி.பி.சாமி மீது போடப்பட்டுள்ளது.
இது தவிர ஜெகதாம்பாள் என்பவருடைய நிலத்தை அபகரித்ததாக ஒரு வழக்கும் போடப்பட்டதாக தெரிகிறது. மேலும் 3 வழக்குகள் கே.பி.பி.சாமி மீது பதியப்பட உள்ளதால் கே.பி.பி.சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்