முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிரியின் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

பாலசோர், மார்ச் - 7 - எதிரியின் ஏவுகணையை  இடைமறித்து தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை இந்திய விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக செய்து முடித்தனர். ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக இருக்கிறது. அக்னி ,பிரித்வி, திரிசூல் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை  இந்திய விஞ்ஞானிகள் சுயமாக தயாரித்து அவற்றை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்துள்ளனர். இதை அடுத்து அந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில்  சேர்க்கப்பட்டுள்ளன. தரையிலிருந்து தரைக்கே பாயும் ஏவுகணை, தரையிலிருந்து விண்ணுக்கு பாயும் ஏவுகணை,  விண்ணிலிருந்து தரைக்கு பாயும் ஏவுகணை, விண்ணிலிருந்து விண்ணுக்கே பாயும் ஏவுகணை என்று பல்வேறு விதமான ஏவுகணைகளை இந்திய  விஞ்ஞானிகள் தயாரித்து வெற்றி கண்டுள்ளனர்.

இப்போது அதை விட ஒரு படிமேலாக எதிரிகளின் ஏவுகணைகளை நடுவழியிலேயே இடைமறித்து தாக்கும் ஏவுகணையையும் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். 

அணு ஆயுதங்களை தாங்கி வரும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவழியில் இடை மறித்து தாக்கி அழிக்க கூடிய நவீன ஏவுகணை ஒன்றை இந்திய  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி  கழக விஞ்ஞானிகள் தயாரித்து அதில் வெற்றி கண்டுள்ளனர்.

இதற்கான சோதனை ஒரிஸ்ஸா மாநிலம் பாலசோர் என்ற இடத்திற்கு அருகே  வங்காள விரிகுடா கடலில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து  நடத்தப்பட்டது. 

எதிரியின் ஏவுகணையை போல பிரித்வி ஏவுகணை ஒன்று வீலர்ஸ தீவில் உள்ள 3 வது  நடமாடும் ஏவுதளத்திலிருந்து காலை 9.33 மணிக்கு  விண்ணில் ஏவப்பட்டது. இதனை தொடர்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு பிறகு அதாவது 9.37 மணிக்கு இடை மறித்து தாக்கும் ஏவுகணை ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. வேகமாக சீறி வந்த பிரித்வி ஏவுகணையை  இந்த இடைமறித்து தாக்கும் ஏவுகணை அதை விட வேகமாக சீறிப்பாய்ந்து சென்று நடு வானில் தாக்கி  அழித்தது.

எதிரியின் ஏவுகணை அணு ஆயுத ஏவுகணையாக இருந்தாலும் கூட அதை  துல்லியமாக கண்டுபிடித்து தாக்கி அழிக்கும்  வல்லமை கொண்ட ஏவுகணையாக இந்தியாவின்  இடைமறித்து தாக்கும் ஏவுகணை நன்றாக செயல்பட்டதாக இந்த சோதனையை நேரில் பார்த்த இந்திய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

இந்த சோதனை வெற்றிகரமான சோதனை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்