முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிமுறைகள் மிக கடுமையாக நடை முறைபடுத்த உத்தரவு

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.8 - உள்ளாட்சி தேர்தலில் நடத்தை விதிமுறைகள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் அய்யர் மதுரையில் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், திண்டுக்கல் கலெக்டர் நாகராஜன், ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய், விருதுநகர் கலெக்டர் பாலாஜி, சிவகங்கை கலெக்டர் ராஜாராமன், தேனி கலெக்டர் பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அஜிஸ்குமார், குமரி மாவட்ட கலெக்டர் மதுமதி, நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், மற்றும் தென் மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அஸ்ராகார்க் மற்றும் 9 மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகள், டிஐஜிக்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

   கூட்டம் முடிவடைந்ததும் மாநில தேர்தல் அதிகாரி சோ.அய்யர் நிருபர்களிடம் கூறியதாவது,  தென் மண்டல கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், தென் காவல் துறை தலைவர், துணை தலைவர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை நடந்துள்ள பணிகள், இனிமேல் நடக்க உள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் இந்த தேர்தலை முழுக்க, முழுக்க சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து வாக்குபதிவு முதல் ஓட்டு எண்ணிக்கை வரை தேர்தல் நடத்தை விதிகளை மிக கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    வாக்காளர்களுக்கு அரசியல் இருக்கலாம், வேட்பாளர்களுக்கு அரசியல் இருக்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அரசியல் இருக்க கூடாது. தேர்தல் இடையூறாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் மாலை 5 மணிவரை எந்த நேரத்தில் சென்றாலும் தனது வாக்கை பதிவு செய்யலாம். அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தலுக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்த தேர்தலில் மின்னணு எந்திரம், புகைப்பட வாககாளர் பட்டியல், புகைப்பட பூத் சிலிப் ஆகியவை முதன்முறையாக வழங்கப்படுகிறது. புகைப்படத்துடன் பூத் சிலிப்பை எடுத்து சென்றால் போதும் வாக்களிக்கலாம். வாக்குசாவடிகளில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளுக்கு தனியாக வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள், மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு பதிவின் போது தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலை விட 50 ஆயிரம் மனு தாக்கல் செய்துள்ளனர். 32 ஆயிரம் பேர் அதிகமாக போட்டியில் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தலைவர் பதவியை ஏலம் விட்ட புகாரை தொடர்ந்து 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்