முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் அடுத்த ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் - அத்வானி

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, அக்.- 13 - மத்தியில்  அடுத்த ஆட்சியை  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என்று  பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஜன் ஷேத்ரா என்ற பெயரில் பா.ஜ.க. மூத்த  தலைவர் எல்.கே. அத்வானி நேற்று முன்தினம் தனது  38 நாள் யாத்திரையை துவக்கினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த ஊரான  பீகார் மாநிலம் சிதப்பியாரா என்ற இடத்தில் இந்த  யாத்திரையை அத்வானி துவக்கினார்.  நேற்று இந்த யாத்திரை இரண்டாவது நாளாக பாட்னாவை அடைந்தது. பாட்னாவில்  திரளாக கூடியிருந்த செய்தியாளர்களுக்கு அத்வானி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் - மத்தியில் அடுத்த ஆட்சியை  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என்றார். ஆனால் பிரதமர் பதவிக்கு  தான் முன்னிலைப்படுத்துவது குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் அவ்வளவு அண்மையில் நடைபெற வாய்ப்பில்லை. என்றாலும்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அலங்கோலங்களால் இந்த தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட வரலாம். அடுத்த தேர்தல் நடைபெற்றால் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவதற்கு  வாய்ப்புக்கள் நிறைய உள்ளன என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற தேர்தல் வரும் போது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை  பா.ஜ.க. மேலிடம் முடிவு  செய்யும் என்றும் அவர் கூறினார். கட்சி மேலிடம் தங்களை பிரதமர் வேட்பாளராக ஒப்புக்கொண்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டதற்கு  எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் ஏற்கனவே கூறி விட்டேன் என்றார். தனது இரண்டாவது நாள் யாத்திரையை  மேற்கொண்ட அத்வானி நேற்று பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.அத்தனை கேள்விகளுக்கும் அவர் சளைக்காமல் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony