முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி -சி 18 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 13 - 4 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி18 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி 18 ராக்கெட் நேற்று காலை 11 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் மெகா டிராபிக், எஸ்.ஆர்.சாட்., ஜூக்னு, வெல்சாட் என்ற 4 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த 4 செயற்கைக் கோள்களில் மிகப்பெரியது மெகா டிராபிக் ஆகும். இந்தியா -பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பில் தயாரானது இந்த செயற்கைக் கோள். இதன் எடை ஆயிரம் கிலோ ஆகும். இது உலகளாவிய புவி வெப்பம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து தகவல் அனுப்பும். இரண்டாவது செயற்கைக் கோளான எஸ்.ஆர்.எம்.சாட் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இதன் எடை 10.9 கிலோவாகும். இதுவும் புவி வெப்பத்தையும், காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு  ஆகியவற்றால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோள்  இரண்டு ஆண்டுகள் வரை பூமியை சுற்றிவரும். அவை அனுப்பும் தகவல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாணவர்கள் 24 மணி நேரமும் பெற்று ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வார்கள்.   மூன்றாவது செயற்கைக் கோளான ஜூக்னு கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்களின் தயாரிப்பில் உருவானது. 3 கிலோ எடைகொண்டது. இந்த செயற்கைக் கோளில் அதி நவீன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பக்கூடியது. இதன் மூலம் பூமியில் உள்ள வளமான பகுதிகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைக் குறித்து ஆராய முடியம். 4 வது செயற்கைக் கோளான வெஸல்சாட் ஐரோப்பிய நாடான லக்ஸம்பரில் தயாரிக்கப்பட்டது. 28.7 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் கடலில் செல்லும் கப்பல்களின் இருப்பிடத்தை கண்டறிய பெரிதும் உதவுக்கூடியது. இந்த 4 செயற்கைக் கோள்களையும் பி.எஸ்.எல்.வி.-சி 18 ராக்கெட் எடுத்துச் சென்றது. 

நேற்று காலை 11 மணிக்கு ராக்கெட்டை செலுத்த விஞ்ஞானிகள் காலம் நிர்ணயித்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 4 கட்ட எரிபொருளுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 4 செயற்கைக் கோள்கள் 26 நிமிடங்களில் ஒவ்வொன்றாக அவற்றின் சுற்றுப்பாதையில் விடப்பட்டன. இதைப்பார்த்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பின்னர் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பி.எஸ்.எல்.வி.-சி 18 ராக்கெட் ஏவும் பணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 4 செயற்கைக் கோள்களும் அவற்றின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டன. பூமியில் இருந்து 867 கி.மீ. தொலைவில்தான் செயற்கைக் கோள்களை பறக்கவிட நாங்கள் திட்டமிட்டிருந்தோம். தற்போது மேலும் 2 கி.மீ. அதிகரித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்