முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் அஞ்சா நெஞ்சர்களாக ஆகிவிட்டனர்: முதல்வர்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,அக்.14 - தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி மலர்ந்து விட்டது. இப்போது நீங்களெல்லாம் அஞ்சா நெஞ்சர்களாகி விட்டீர்கள். அஞ்சா நெஞ்சர் என்று தம்பட்டம் அடித்தவர் அஞ்சி ஓடிவிட்டார் என்று மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.    தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர்கள் மற்றும் வார்டு வேட்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பக்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா நெல்லை சென்று உள்ளாட்சி மன்ற அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்தார். புதுநத்தம் ரோட்டில் உள்ள ஆயுத படை மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்து இறங்கினார். அவரை அதிமுக தலைமை கழக செயலாளரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ, புறநகர்  மாவட்ட கழக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மற்றும் எம்எல்ஏக்கள் மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சார வேனில் புறப்பட்டு புதுநத்தம் ரோடு, ரேஸ்கோர்ஸ் காலனி, தாமரை தொட்டி, ஐடிஐ பஸ் ஸ்டாப் வழியாக கோ.புதூரை சரியாக 4 மணி அளவில் வந்தடைந்தார். புதூர் பஸ்நிலையத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான பொதுமக்களிடையே  மதுரை மேயர் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது உங்களை எல்லாம் சந்தித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டேன். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள். இதனையடுத்து தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது. புரட்சி தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி மலர்ந்தது. உங்களது அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை உங்கள் அன்பு சகோதரியான நான் நிறைவேற்றி இருக்கிறேன். அனைவருக்கும் விலையில்லா அரிசி, முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினேன். மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவி திட்டங்களின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் உதவி  தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், பட்டம் படித்த பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் என உயர்த்தப்பட்ட உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கினோம். மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினோம். பெண் அரசு ஊழியர்கள் பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க 6 மாத காலம் மகப்பேறு வி

டுப்பு வழங்கினோம். இந்த திட்டங்களின் பயனை நீங்களெல்லாம் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். இது மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை என்று ஒரு தனித்துறையினையும் ஏற்படுத்தி இருக்கிறேன். இவைமட்டுமின்றி தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கல்லூரி மாணவர்களுக்கு மடி கணினி, ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் படிப்பை பாதியிலே நிறுத்துதலை குறைக்கும் பொருட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் திட்டங்களை எல்லாம் துவக்கி வைத்துள்ளேன்.

    சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன். இலங்கை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை இயற்றி உள்ளோம். சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமலி காடாக விளங்கிய தமிழகம் எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக நான்கே மாதங்களில் அமைதி பூங்காவாக மாறி இருக்கிறது.

   முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் நில அபகரிப்புகள் அதிக அளவில் நடைபெற்றன. இதனை அறிந்த நான் திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களுக்கு திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தேன். இதனை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிமிருந்து புகார்கள் பெற்று வழக்கு பதிவு செய்து சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கிட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 25 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபடுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

   உங்களின் முக்கிய கோரிக்கைகளான முறைப்படுத்தப்பட்ட வெளிப்படையான நிதி ஒதுக்கீடு மற்றும் செயலாக்க திட்டம் மதுரை மாநகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் தேவைக்கு கல்லாறு அணைத்திட்டம், அடுக்குமாடி தானியங்கி வாகன நிறுத்தம் அமைத்தல், மதுரை மாநகராட்சியை மாசற்ற மாநகராட்சியாக உருவாக்கும் திட்டம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், உதவி தொகைகள்வழங்க சேவை மையங்கள் அமைத்தல், வைகை ஆற்றோர பொழுது போக்கு பூங்காக்கள், நீர் வற்றாத பொற்றாமரை குளம்அமைக்கும் திட்டம், சாலை நடைபாதை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றித்தரப்படும். மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் ஒரு நேர்மையான திறமையான தூய்மையான ஒளிவுமறைவற்ற மக்கள் நலனை குறிக்கோளாக கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும். எனவே உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கு இந்த தேர்தல் நல்ல சந்தர்ப்பமாக உங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி கொணடு மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பு சகோதரர் ராஜன்செல்லப்பாவுக்கும், மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கும் நம் இதய தெய்வம்  புரட்சி தலைவர் எம்ஜிஆர் கண்ட வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அனைவரையும் மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டுமென வாக்காள பெருமக்களாகிய உங்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் நீங்கள் நிகழ்த்தி காட்டிய வரலாற்று சாதனையை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கி காட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்