முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பிரச்சனை - முதல்வர் ஜெயலலிதா பேட்டி

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.14 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையை ஒரே இரவில் மாநில அரசால் தீர்த்துவிட முடியாது. அதற்கு கால அவகாசம் ஆகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: கூடங்குளம் பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

முதல்வர்: பிரதமரிடம் இருந்து எனக்கு இன்னும் கடிதம் வரவில்லை. கடந்த 4 ம் தேதி அவர் எழுதிய கடிதம் பற்றி நான் டி.வி.யிலும், மீடியாவிலும்தான் பார்த்தேன். எனக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அந்தக் கடிதமே கிடைத்தது. சமீபத்தில் பிரதமர் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் எனக்கு இன்னும் வந்துசேரவில்லை. அந்த கடிதம் வரட்டும். 

கேள்வி: சங்கரராமன் கொலைவழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெயேந்திரர் பேசிய டேப் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதுபற்றி...

முதல்வர்: அந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளது. எனவே அதுபற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. 

கேள்வி: கூடங்குளம் பிரச்சனையில் போராடுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அவர்கள் பணியாளர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்துள்ளனர். நிலைமை குழப்பமாக உள்ளதே...?

முதல்வர்: கூடங்குளம் பிரச்சனையை ஒரே இரவில் மாநில  அரசால் தீர்த்துவிட முடியாது. அதற்கு கால அவகாசம் ஆகும். எனவே இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. காரணம் அது உணர்ச்சிகரமான பிரச்சனை. சர்ச்சைக்குரிய பிரச்சனையும்கூட. 

கேள்வி: 2 ஜி.வழக்கில் பிரதமரின் கடிதத்தை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்திருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளதே? மேலும் மத்திய அரசின் மவுனம் பற்றியும் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளதே?

முதல்வர்: இந்த விவகாரத்தில் இப்போது  நான் கருத்துச்சொல்வது உரிய செயலாக இருக்காது. 

கேள்வி: பிரசாந்த் பூசன் நேற்று  தாக்கப்பட்டுள்ளார். இன்று  அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டுள்ளார்களே?

முதல்வர்: இன்று (நேற்று) நடந்தது எனக்கு தெரியாது. ஆனால் நேற்று நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கதும்கூட. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இடமில்லை. 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேட்டியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்