முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது அரசியல் கட்சி தலைவர் பிரச்சாரம்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 15 - தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தல் வருகிற 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி உள்பட 120 நகராட்சிக்களுக்கு 17-ந்தேதி (திங்கள் கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இப்பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன. 5 லட்சத்து 27 ஆயிரத்து 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாகவும், நடுநிலையுடனும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டிருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வெளிமாநிலங்களிலிருந்து 3,000 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். 7 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 39 தேர்தல் கண்காணிக்கப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக வருகிற 17-ந்தேதி (திங்கள் கிழமை), சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 191 பஞ்சாயத்து யூனியன்கள் ஆகியவற்றிலுள்ள இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக 19-ந்தேதி (புதன் கிழமை) 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராமப் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றிற்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் 17-ந்தேதி நடைபெறுவதால், இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக அரசியல் கட்சித்தலைவர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களும் பிரச்சார வேன்களில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு தெரு தெருவாக ஆதரவு திரட்டி வருகிறார்கள். குறிப்பாக மாலை நேரத்தில் பிரச்சாரம் தொடங்குகிறார்கள். இரவு 10.00 மணிவரை வீதிவீதியாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் புறப்பட்டார். அங்கு கோட்டை மைதானத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதையடுத்து, கோவைக்கு சென்றார். அங்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மாலையில் சென்னை திருப்பினார். நேற்றைய தினம் சேலம், ஈரோடு, கோவை, திருப்nullர் ஆகிய  இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை மற்றும் வேலூர் மாநகராட்சியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 11 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் கார்த்திகேயினி மற்றும் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்காக ஆதரவு திரட்டுகிறார். பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை ஆலந்தூரில் பிரச்சாரத்தை தொடங்கி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி மற்றும் மாமன்ற அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு 7 இடங்களில் பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஜெயலலிதா, நுங்கம்பாக்கம் புஷ்பாநகரில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்