முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் 13 உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

சென்னை, அக்.- 15 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நேற்று 100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  தமிழ்இஆநாடு அரசு பணிகளுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்வதற்கான தகுதி தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்லமுத்து செயல்படுகிறார். இவர் தவிர டி.என்.பி.எஸ்.சி.யில் 13 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு சென்னை பாடியில் உள்ள செல்லமுத்துவின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த தகவல் வெளியான  அடுத்த சில நிமிடங்களில் தேர்வாணையத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது தெரிய வந்தது. தேர்வாணைய உறுப்பினர்களான சங்கரலிங்கம், லட்சுமணன், ஷோபினி, சேவியர், ஜேசு ராஜா, கே.எம்.ரவி, ஜி.சண்முகமுருகன், கே.கே.ராஜா, எஸ்.பன்னீர்செல்வம், வி.ரத்தின சபாபதி,  பி.பெருமாள்சாமி, டி.குப்புசாமி, ஜி.செல்வமணி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினார்கள்.  அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சங்கரலிங்கத்தின் வீடு திருச்சியில் உள்ளது. அங்கும் சோதனை நடைபெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த சோதனையில் ஒட்டுமொத்தமாக 100 அதிகாரிகள் வரை முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருவது அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்ட விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையால் ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதவி பல் மருத்துவ பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பு பார்வையிட கோரியதன் மூலம் குற்ற நடவடிக்கைகளில் முயன்று தவறான வழிகளில் பணப்பயன் பெற முயற்சித்தமைக்காக பிரிவுகள் 15, 13 (1) ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 2006- 2008-ம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் தகுதியற்ற பணியாளர்களை தேர்வு செய்து ஊழலில் ஈடுபட்டதற்காக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குரூப்-1 அலுவலக தேர்வுகளில் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடாமல் தடுக்கும் பொருட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழ்நாடு தேர்வாணையத்தின் தலைவர் செயல்பட முடியாமல் குற்ற அலுவலர்கள் தடுத்ததன் மூலம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 186-ன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சட்ட வரம்பிற்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை விசாரணைக்கு ஆஜர்படுத்த கோரியபோது அவற்றை தர மறுத்ததன் மூலம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 175-ன் கீழ் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்