முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வெட்டு பதிப்பதிலும்,கமிஷன் வாங்குவதிலுமே தி.மு.க.வினர் கவனம் செலுத்தினார்கள்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக்.- 15 - மதுரை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகம் கல்வெட்டில் பெயர்களை பதிப்பதிலும், கமிஷன் வாங்குவதிலுமே கவனம் செலுத்தியது என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ். முத்துமணி குற்றம் சாட்டினார். மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 70-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் கே.சண்முகவள்ளி ஆகியோரை ஆதரித்து காமராஜபுரம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பி.கோவிந்தசாமி(மாநில கட்டிடப் பிரிவு அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர்)தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.முத்துமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது வருமாறு:- கடந்த 1977 ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற மதுரை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. அப்போது ஒரு சிறுபான்மை சமூகமான - உன்னதமான கைத்தறித் தொழில் உழைப்புக்குச் சொந்தக்காரர்களான செளராஷ்ட்டிர சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை மேயராகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முனியசாமியை (அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவள்ளியின் தந்தை) துணை மேயராகவும் ஆக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. ஆரம்பகட்டத்தில் காமராஜர்புரம் பகுதி மேடும் பள்ளமுமாய் சாக்கடைத் தண்ணீர் ஆங்காங்கே நிரம்பிய பகுதியாக காட்சியளித்தது. இப் புறம்போக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு ஏற்படுத்தி குடியேறியதற்கும், வடக்குத் தெருவில்  குப்பை மேடாகக் கிடந்த  இடத்தை திருத்தி அமைத்து பள்ளிவாசல் அமைக்கப்பட்டதற்கும், ஊரணிகளை மேடாக்கி வீடுகள் அமைக்கப்பட்டதற்கும், முத்துராமலிங்கத்தேவர் தெருவில் சாக்கடைப் பகுதிகளை சீர்செய்து ரோடாக மாற்றியதற்கும் பாலரெங்காபுரத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டியைக் கட்டி அங்கிருந்து காமராஜபுரத்தின் அனைத்துப் பகுதிக்கும் குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டதற்கும் முன்னாள் துணை மேயர் முனியசாமிதான் காரணம் என்பதை இப்பகுதி மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் வழியில் நமது முதல்வரின் ஆசியோடு, இந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டுமுறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்முறையும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் சண்முகவள்ளி. இவர் எடுத்த சீரிய முயற்சிகளின் காரணமாகத்தான் சிறு வியாபாரிகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒரு சிறந்த மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வார்டுக்கு உட்பட்ட அனைத்து சாலைகளுமே சிமெண்ட் ரோடாக போடப்பட்டதற்கும், எல்லா பகுதிகளிலும் சோடியம் விளக்கு அமைக்கப்பட்டதற்கும்,  அனைத்து பகுதிகளிலும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பற்றாக்குறையின்றி குடிதண்ணீர் கிடைப்பதற்கும் தேவையான அளவிற்கு போர்வெல் அமைக்கப்பட்டதற்கும், வைத்தியநாதய்யர் தெருவில் மேல்நிலைத் தொட்டி அமைத்து அதில் இருந்து 11 குழாய்கள் மூலம் காமராஜர்புரம் முழுவதற்கும் நல்ல குடிநீர் சப்ளை செய்யப்படுவதற்கும், ராம் தியேட்டர் அருகில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டதற்கும், இப்பகுதிக்கு மண்ணெண்ணை மையம் கொண்டுவந்ததற்கும் நமது அ.தி.மு.க வேட்பாளர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே காரணம். தற்போது மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்துள்ளது. அம்மாவின் தலைமையில் சீரிய ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால், அம்மாவிடம் இருந்து அதிக நிதியை பெற்று அடிப்படை வசதிகளை இந்தப் பகுதி மக்கள் பெற்றிடவும், நீண்டகாலமாக குடியிருந்து வருவோர் அனைவருக்கும் உரிய முயற்சி எடுத்து வீட்டு மனைப்பட்டாக்களை பெற்றுக் கொடுத்திடவும் எளிதாக இருக்கும். எனவே மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கும், 70 வது வார்டு வேட்பாளர் சண்முகவள்ளிக்கும் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள். இன்றைய மதுரை மாநகரம் தி.மு.க. ரவுடிகளின் அட்டகாசப் பிடியில் இருந்து விடுபட்டு அமைதியாக விளங்குகிறது. மதுரை அமைதிப் பூங்காவாக நீடித்து, மக்களின் மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க அனைவரும் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 

`க' கட்சி மதுரை மாநகராட்சியில் பொறுப்பில் இருந்தபோது மதுரை மாநகரில் வளர்ச்சிப் பணிகளில் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கவனம் துளியும் செலுத்தவில்லை. மாறாக ஆடம்பர விழாக்களை நடத்தி கல்வெட்டு பதிப்பதிலும், கமிஷன் பார்ப்பதிலுமே ஆர்வம் காட்டினார்கள். எனவே சட்டமன்ற தேர்தலில் ஒரு மவுனப் புரட்சி மூலம் புதிய வரலாறு படைத்ததுபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை அமோகமாக வெற்றிபெறச் செய்யுங்கள். இந்த வெற்றி மக்களின் வெற்றியாக அமையும். 

இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்