முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்கட்ட பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக்.- 15 - உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (17 ம் தேதி) நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 19 ம் தேதி நடைபெறுகிறது. இந்த இரண்டுகட்ட தேர்தல் பணிகளிலும் 7 லட்சம் பேர் தேர்தல் பணியாற்றுவார்கள். 39 பேர் தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் அமைதியாகவும், நடுநிலையுடனும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஒரு சிறு பிரச்சனைகூட ஏற்படக் கூடாது என்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளாட்சி தேர்தலில் தற்போது 5 லட்சத்து 27 ஆயிரத்து 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இம்முறை உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படாமல் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கியுள்ளதால் தேர்தல் பணியில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். இதனாலேயே இந்த உள்ளாட்சி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. 10 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நாளை மறுநாள் (17ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே இப்பகுதிகளில் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்கள். தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அ.தி.மு.க.சார்பில் முதல்வர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி, நெல்லை, மதுரையில் பிரச்சாரம் செய்தார். நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதேபோல அனைத்துக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரிகிறார்கள். 

2-வது கட்ட தேர்தல் 19 ம்தேதி நடைபெறுகிறது. இதில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்