முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 17 - அ.தி.மு.க. உருவாகி 39 ஆண்டுகள் நிறைவடைந்து 40 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் எந்த காலத்திலும் தீய சக்திகள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடியாத வகையில் மக்கள் பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா, அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது 39 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2011​ல் அகவை 40​ல் அடியெடுத்து வைப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நன்னாளில் நமது இயக்கம் கடந்து வந்த வெற்றிப் பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த வரலாற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.  அதே நேரத்தில், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட செயல் வீரர்களையும், வீராங்கனைகளையும், இயக்கப் பணிகளின் போது உயிர் நீnullத்த உத்தமத் தொண்டர்களின் தியாகங்களையும் எண்ணி அவர்களுக்காக கண்ணீர் சிந்தி நன்றி கூறும் நெகிழ்ச்சியான உணர்வையும் பெறுகிறேன். தமிழகத்து மக்களெல்லாம் ஒரு சேர கிளர்ந்தெழுந்து கருணாநிதி என்னும் தீய சக்தியை தூக்கி எறிய கண்டுபிடித்த பேராயுதம் தான் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.  மக்களுக்காக, மக்களே உருவாக்கி, மக்கள் திலகத்தை தலைமை ஏற்கச் செய்து, ஆட்சி அமைக்க உருவாக்கிய மக்கள் புரட்சி இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.  எனவே தான், 1972​ல் கழகம் தொடங்கப்பட்ட ஆறே மாதத்தில் 1973​ஆம் ஆண்டில் திண்டுக்கல் மண்ணில் நாடாளுமன்ற இடைத் தேர்தலை சந்தித்து இந்த இயக்கத்தால் வெற்றி பெற முடிந்தது.   அதன் தொடர்ச்சியாக, 1977​ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். ஓர் இயக்கம் தொடங்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் ஆதிக்க சக்தியை, குடும்ப ஆதிக்கத்தை, கொள்ளைக் கும்பலின் அராஜகத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்த்தது என்றால், அது இந்திய அரசியல் வரலாற்றில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் மட்டும் தான்.  எத்தனை முறை முயன்றும் கருணாநிதி என்னும் தீய சக்தியால் வெற்றி பெற முடியாத, வீழ்த்த முடியாத இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, 1980​ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலும் உலகிற்கு உணர்த்தியது.  எம்.ஜி.ஆர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில், சத்துணவுத் திட்டம் என்னும் உலகுக்கே கலங்கரை விளக்கமாய் அமைந்த மாபெரும் மனிதாபிமான திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  பாரதியார், பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, அன்னை தெரசா போன்ற சான்றோர்களின் பெயர்களில் பல்கலைக்கழகங்கள் கண்டவர் எம்.ஜி.ஆர்.  உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஒரு மொழிக்காக பல்கலைக்கழகம் கண்டவர் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.  ஆம், தஞ்சையிலே அவர் ஏற்படுத்திய தமிழ் பல்கலைக்கழகத்தைத் தான் குறிப்பிடுகிறேன். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் ஆழமான அன்பும், அசைக்க முடியாத பற்றுறுதியும், எல்லையில்லாத நன்றிப் பெருக்கும் உடையவர் நம் எம்.ஜி.ஆர்.   எனவே தான், இன்றைய தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கெல்லாம் முன்னோடியாக பல திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.  சமூக nullநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர்.  எனவே தான், 31 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று பிற்பட்டோருக்கு இருந்த உரிமையை 50 விழுக்காடாக தனது ஆட்சிக் காலத்தில் உயர்த்திக் காட்டினார்.  1984​ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற,​நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்று வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் நம்முடைய இயக்கத்தை அபகரிக்கவும், ஆட்சியை கைப்பற்றவும் தீய சக்தி மேற்கொண்ட முயற்சிகளை என்னுடைய தீவிர செயல்களால் முறியடித்தேன்.  தேர்தல் பிரச்சாரம் வழியாக நான் மேற்கொண்ட சூறாவளி சுற்றுப் பயணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.  எம்.ஜி.ஆர். முதலமைச்சராகவே வெளி நாட்டில் இருந்து திரும்பி வந்து பதவியேற்றார்.  அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் கழகம் பிளவுபட்ட நேரத்தில், நான் எடுத்த தீவிர முயற்சிகளின் காரணமாக, முடக்கப்பட்டிருந்த கழகத்தின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தேன்.  1989​ல் கழகம் ஒன்றிணைக்கப்பட்டது.  மீண்டும் 1991​ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி எனது தலைமையில் அமைந்தது.  எண்ணற்ற நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினோம்.  பின்னர் 1996​ல் வந்த தேர்தலில், தீய சக்தியும், தந்திர சூழ்ச்சியாளர்களும், சூதுமதியினரும் மேற்கொண்ட அரசியல் சதுரங்க விளையாட்டு காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  தமிழகமோ அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியை சந்தித்தது.  தமிழக மக்கள் விழித்தெழுந்து 2001​ஆம் ஆண்டு கழகத்தின் கைகளில் மீண்டும் ஆட்சியை ஒப்படைத்தனர். உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அரும்பாடுபட்டு நிர்வாகத்தை சீரமைத்தேன்.  நிதி நிலையை உயர்த்தினேன்.  அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடம் நோக்கி பீடுநடை போட்டது.  சற்றும் எதிர்பாராத விதமாக 2006​ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத கட்சியாக இருந்த போதும் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது.  வழக்கம் போல், கருணாநிதியின் குடும்பம் தமிழ் நாட்டை சூறையாட ஆரம்பித்தது.  எல்லா பதவிகளும், எல்லா செல்வங்களும் ஒரு குடும்பத்திற்கே என்ற நிலையை மீண்டும் கருணாநிதி உருவாக்கினார். உலக வரலாற்றில் யாரும் கண்டிராத 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்த கட்சி திமுக; ஊழல் புரிந்த குடும்பம் கருணாநிதி குடும்பம் என்ற ஒரு அவப் பெயரை தேடிக் கொடுத்தார் கருணாநிதி.  ஆளும் கட்சியினரின் அராஜகம், அட்டூழியம், ஊழல், கொள்ளை ​ இவற்றை எதிர்த்து நான் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாகவும்; அந்த முயற்சிக்கு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளும், தமிழக மக்களும் அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவும், இதோ, நம்முடைய கழகம் ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்ந்திருக்கிறது! உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனேயே விலையில்லா அரிசி; முதியோருக்கு 1,000/​ ரூபாய் ஓய்வூதியம்; தாலிக்குத் தங்கம்; திருமண உதவித் தொகை 25,000/​ ரூபாய் மற்றும் 50,000/​ ரூபாய்;  தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி; மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி;  ஏழைகளுக்கு ஆடு, மாடுகள் ஆகியவற்றை வழங்குகிறோம்.  மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.  தி.மு.க.​வினராலும், சமூக விரோத சக்திகளாலும் அபகரிக்கப்பட்ட ஏழை, எளியோரின் நிலங்கள் சட்டப்படி மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் மகத்தான பணி நாடே வியக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த மகிழ்ச்சி தொடர, நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய இந்தப் பொன்னாளில் உறுதி மேற்கொள்ள வேண்டும்.
இனி, எந்தக் காலத்திலும் தீய சக்திகள் தமிழ் நாட்டை கொள்ளையடிக்க முடியாத வகையில் மக்கள் பணியாற்றுவோம் என்பது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி.  இந்தப் பொன்னாளில் ஊரெங்கும் கழகக் கொடிகளை ஏற்றுங்கள்!  எல்லோருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழுங்கள்!  உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வெற்றி மாலையை நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்!
வாழ்க பெரியார் புகழ்!, அண்ணா நாமம் வாழ்க!, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!
இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்