முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை தொடர் - கெவின் பீட்டர்சன் விலகல்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 8 - நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் உடல்நலக் குறைவு காரணமாக விலகியுள்ளார். 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தபின் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அபார வெற்றிபெற்று ஓரளவு மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அந்த அணியின் அதிரடி  ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் குடலிறக்க நோய் காரணமாக இந்த உலக கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் அந்த அணிக்கு ஒரு தூண்போன்று விளங்கக் கூடியவர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இவருடைய பங்களிப்பும் மிகச் சிறப்பாக இருந்ததால்தான் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி புகழ்பெற்ற ஆஷஸ் கோப்பையை வென்றது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி 6 - 1 என்ற கணக்கில்  தொடரை இழந்தது. இந்த போட்டிகளின்போதே பீட்டர்சன் குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டார்.  

இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பீட்டர்சன் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் இவர் சமீபகாலமாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இந்த உலக கோப்பை போட்டி தொடர்  முடிந்தபிறகு இவருக்கு இந்நோய்க்கான அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அறுவை சிகிச்சையை முன்னதாகவே நடத்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அணியின் செய்தி தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். இதனால் இந்த உலக போட்டித் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் கெவின் பீட்டர்சன் ஆடமாட்டார். பீட்டர்சன் மிகச் சிறந்த வலக்கை பேட்ஸ்மேன். இவரது இழப்பு இங்கிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

பீட்டர்சனுக்கு பதிலாக இங்கிலாந்து அணியில் மோர்கன் சேர்க்கப்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.   உலக கோப்பை போட்டியை அடுத்து மிக விரைவில் தொடங்கவுள்ள ஐ.பி.எல். தொடரிலும் பீட்டர்சன் பங்கேற்க மாட்டார் என்று தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்