முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா நகர் இடைத்தேர்தல்: என்.ஆர். காங்கிரஸ் வெற்றி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, அக்.21 - புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அவர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்திரா நகர் தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன. 

மேலும் தேர்தல் களத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் 2 சுயேட்சைகளும் போட்டியிட்டனர். 

எனினும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், அ.தி.மு.க. வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் ஆகியோருக்கு இடையே மட்டும் மும்முனைப்போட்டி நிலவியது. 

இந்திரா நகர் தொகுதியின் மொத்த வாக்காளர் 29 ஆயிரத்து 5 ஆகும். இடைத்தேர்தலில் 24 ஆயிரத்து 210 வாக்குகள் பதிவாகின. இது 83.43 சதவீதம் ஆகும். 

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. 

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 14 வாக்குகளையும் தமிழ்செல்வனே பெற்று இருந்தார். 

இதையடுத்து காலை 8 மணிக்கு சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டன. அவைகள் 7 மேஜைகளில் வைக்கப்பட்டு 4 ரவுண்டுகளாக எண்ணப்பட்டது. 

இதில் முதல் ரவுண்டில் இருந்தே என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். முதல் ரவுண்டில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன், காங்கிரஸ் வேட்பாளர் ஏகேடி ஆறுமுகத்தை விட 1328 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.  அ.தி.மு.க. வேட்பாளர் 3-வது இடத்தில் இருந்தார். 

4-வது சுற்றின் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகத்தை விட 8 ஆயிரத்து 46 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஏகேடி ஆறுமுகம் 7 ஆயிரத்து 7 வாக்குகள் பெற்று 2-வது இடத்தையும், அ.தி.மு.க. வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் 1578 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றார்.

இதில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-29005.

பதிவானவை-24210.

தபால் ஓட்டு-14.

தமிழ்செல்வன்(என்.ஆர்.காங்கிரஸ்)-15053.

ஏகேடி ஆறுமுகம்(காங்கிரஸ்)-7007.

சுத்துக்கேணி பாஸ்கரன்(அ.தி.மு.க.)-1578.

தமிழ்செல்வம்(சுயே)388.

வீரராகவன்(சுயே)-109.

வைத்தியநாதன்(பகுஜன் சமாஜ்)-51.

சண்முகம்(ஜ.ஜே.கே.)-38.

வாக்கு எண்ணிக்யை முன்னிட்டு பாரதிதாசன் கல்லூரியின் முன்புற வாசலான காந்தி வீதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின் பக்க வாசல் வழியே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. மேலும் கல்லூரிக்குள் தேர்தல் துறை ஊழியர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் தவிர துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்