முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மாநகராட்சிகளையும் கைபற்றி அ.தி.மு.க. சாதனை

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,அக்.22 - தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளையுமே அ.தி.மு.க. கைப்பற்றி இமாலய சாதனை படைத்துவிட்டது. தனித்து போட்டியிட்ட நிலையிலும் இந்த வெற்றி கட்சிக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்துவிட்டன. ஆனால் அ.தி.மு.க. மாநகராட்சகளில் வெற்றிபெற்றதோடு 90-க்கும் மேற்பட்ட நகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது. தி.மு.க.வுக்கு 23 நகராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. 

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள். அ.தி.மு.க. மட்டுமே கிட்டத்தட்ட 148 தொகுதிகளை வென்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமையவில்லை. எல்லா கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. இதுவரை கூட்டணி இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்ததில்லை. தற்போது முதல் முறையாக அ.தி.மு.க. உள்பட எல்லா கட்சிகளும் தனித்து களம் இறங்கின. இதனால் இந்த கட்சிகளின் பலத்தை அறிய மக்களே ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். தேர்தலும் வந்தது. கடந்த 17,19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் வெற்றியை தாருங்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டபடி தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை கொடுத்துவிட்டார்கள். தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., சென்னை, மதுரை,உள்ளிட்ட 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது. மேலும் 90 நகராட்சிகளையும் அ.தி.மு.க.கைப்பற்றி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. ஆனால் தி.மு.க. வுக்கு 23 நகராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. தே.மு.தி..க.2 நகராட்சிகளையும் இ.கம்யூனிஸ்ட் 2 நகராட்சிகளையும் ம.தி.மு.க. குளித்தலை நகராட்சியையும் பா.ஜ.க. 2 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளன. காங்கிரஸ், பா.ம.க.போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்து உள்ளன.

சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியத்தை விட சுமார் 2 லட்சத்து 68 ஆயிரத்து 6 வாக்குகள் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பெற்றிருந்தார். சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 175 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றிவிட்டது. காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. திருச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜெயா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் விஜயாவைவிட 52 ஆயிரத்து 415 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். மதுரையில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பா நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 119 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். கோவை அ.தி.மு.க. வேட்பாளர் செ.ம.வேலுசாமி நேற்று இரவு 8 மணி இரவு நிலவரப்படி 2 லட்சத்து 66 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 404 வாக்குகள் பெற்று பின்னணியில் இருந்தார். திருப்பூர் மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட விசாலாட்சி ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 949 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் 59 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஈரோடு மாநகராட்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மல்லிகா பரமசிவம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செல்லப்பொன்னியை விட 46 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இதேபோல் வேலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகாயினி சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சவுண்டப்பன், தூத்துக்குடியில் அ.தி.மு.க.வேட்பாளர் சசிகலாபுஷ்பா ஆகியோரும் அமோக வெற்றிபெற்றுள்ளனர். ஆகமொத்தம் 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க.கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துவிட்டது. தி.மு.க. ஒரு மாநகராட்சியைக்கூட கைப்பற்றவில்லை. 90 நகராட்சிகளிலும் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அ.தி.மு.க. வெற்றிவாகை சூடியுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், காரைக்குடி, தேவகோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், கம்பம், கொடைக்கானல், கரூர், ஊட்டி, குன்னூர், கூடலூர், பண்ருட்டி,ராசிபுரம், கோவில்பட்டி, நாகை, மன்னார்குடி, கும்பகோணம், மேட்டூர், செங்கோட்டை, திருவள்ளூர், திருவேற்காடு, தாம்பரம், வேதாரண்யம், மறைமலைநகர், பொள்ளாச்சி, தர்மபுரி, பட்டுக்கோட்டை வாலாஜாபாத் போன்ற நகராட்சிகள் உள்பட 90-க்கும் மேலான நகராட்சிகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 23 நகராட்சிகளையும் தே.மு.தி.க. 2 நகராட்சிகளையும் இடது கம்யூனிஸ்ட் 2 நகராட்சிகளையும் குளித்தலை நகராட்சியை ம.தி.மு.க. வும் பா.ஜ. க. 2 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளன. ஆனால் இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. தனித்து போட்டியிட்டு சாதனை படைப்போம் என்று கூறிய விஜயகாந்த் கட்சி மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்