முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வெற்றி: புதிய நீதிக்கட்சி தலைவர் பாராட்டு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.22 - உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதற்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடைபெற்ற திருச்சி (மேற்கு) தொகுதி இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை பரிசளித்துள்ளார்கள். தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்த வாக்குறுதிகளை கடந்த 6 மாதங்களில் பெரும்பாலானவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியினை ஓட்டுகள் மூலம் தெரிவித்துள்ளார்கள். 

இன்றைய தினம் சட்டம்- ஒழுங்கு சீர்செய்யப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கின்றது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகி உள்ளது. ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மடிக்கணினி இலவசமாக வழங்கப்பட்டது. முதிர் கன்னியாகவே வாழ்வு முடிந்து விடுமோ என்று வாடிய ஏழை பெண்களின் திருமணத்திற்கு கல்வி தகுதிக்கேற்ப அரை சவரன் தங்கமும் (தாலி) ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளார். 

மீனவர்களுக்கு மீன் பிடிக்க முடியாத காலங்களில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. பிழைக்க வழியில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு இலவசமாக 4 ஆடுகள், கறவை மாடு ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கியது. 25 லட்சம் குடும்பங்களுக்கு மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை வழங்கியது என்று அவரை தமிழக மக்கள் வாழ்த்தி மகிழ்கின்றனர். 

தொடர்ந்து மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வீசிய அவதூறு கணைகள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவால் அர்ச்சனை பூக்களாய் பொழிகின்றன. திருச்சி (மேற்கு) தொகுதியிலும், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுகத்கு வெற்றி மாலையை மக்கள் சூட்டியுள்ளனர். 

இந்த வெற்றியை பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony