முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையின் வாக்குமூலத்தை ஆதாரமாக கொள்ளலாம்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,அக்.22 - குழந்தையின் வாக்குமூலத்தை ஆதரமாக எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு கொலை வழக்கில் மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திரத்தினத்தன்று ஷேக் யாகூப் என்பவர் தனது மனைவி ரேஹனாவை தன் 3 வயது மகன் கண்முன்பே படுகொலை செய்தார். இந்த படுகொலை வழக்கில் நாக்பூர் கோர்ட்டு யாகூப்புக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் யாகூப் அப்பீல் செய்தார். அப்பீல் மனுமீதான இறுதி விசாரணை நீதிபதிகள் பி.வி. ஹர்தாஸ், எஸ்.பி.தேஷ்முஹ் ஆகியோர் தலைமையிலான பெஞ்சில் நடைபெற்றது. யாகூப் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்கும்போது சத்தியப்பிரமாணத்தை யாகூப் மகன் சிறுவனாக இருப்பதால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் யாகூப்புக்கு ஆயுள் தண்டனை விதித்து இருப்பதை உறுதி செய்தனர். மேலும் சத்தியப்பிரமாணத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு யாகூப் மகன் இருப்பதால் அவனுடைய வாக்குமூலத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம் என்றனர். யாகூப் அப்பீல் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த படுகொலை சம்பவத்தில் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும்,சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் ஆதாரத்தை பரிசீலனை செய்து பார்த்ததில் இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளி யாகூப் வேண்டுமென்றே மட்டுமல்லாது தெரிந்தே தன் மனைவி ரேஹனா மீது கெரோசினை ஊற்றி தீ வைத்து படுகொலை செய்துள்ளார். அதனால் கீழ் கோர்ட்டில் வழங்கப்பட்ட தண்டனையும் நீதிபதி அளித்த தீர்ப்பையும் நாங்கள் உறுதி செய்கிறோம் என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த படுகொலை சம்பவமாக நாக்பூர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது யாகூப் மகன் எர்ஷாத்திற்கு வயது 10. அவன் சாட்சியம் அளிக்கும்போது என் அம்மாவை தந்தை யாகூப்தான் கெரோசின் ஊற்றி தீ வைத்து படுகொலை செய்தார் என்று அவரை பார்த்து கை நீட்டி கூறுகிறான். மேலும் அவன் இதற்கு முன்பு போலீசில் கொடுத்த வாக்குமூலமும் தற்போது அவன் அளிக்கும் சாட்சியமும் ஒன்றாகவே இருக்கிறது என்றும் நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!