முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு

புதன்கிழமை, 26 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன், அக்.26 - ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பிரஜையாக வசித்துவரும் இலங்கை தமிழரான ஜெகதீஸ்வரன்(63) என்பவர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா பெர்த் நகருக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வரவுள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெகதீசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிகட்ட போரின் போது இலங்கையில் தமிழர்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள் மற்றும் சமூக மையங்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்துமே போர்க்குற்றங்களாகும். இந்த பயங்கரமான குற்ற நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் துன்பப்படுகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த சம்பவங்களை நேரில் பார்த்து அதிர்ந்து போனேன். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்காக வந்தவர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வடபகுதியில் இருப்பவர்கள் எப்படி தப்பினார்கள் என்பது ஆச்சர்யமான ஒன்று தான். ஆம்புலன்சுகளையும் கூட விட்டுவைக்கவில்லை. அதனையும் தாக்கி அழித்துவிட்டனர். ரெட்கிராஸ் மருத்துமனைகள் என்று தெரிந்தும் கூட தாக்குதல் நடத்தினர். இவை அனைத்துக்கும் ராஜக்சேவே முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வளவு பெரிய குற்றவாளியை ஆஸ்திரேலியாவுக்கு சுதந்திரமாக வந்து செல்வதை சகிக்க முடியாது. இந்த விஷயத்தில் நீதிகிடைக்க வேண்டும். ராஜபக்சே குற்றவாளியா இல்லையா என்பதை ஆஸ்திரேலியா நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று ஜெகதீஸ்வரன் கோரியுள்ளார். இந்த வழக்கு நவம்பர் மாதம் 29ம் தேதி விசாரிக்கப்படவுள்ளதாக ஜெகதீஸ்வரனின் வழக்கறிஞர் கூறியுள்ளார். ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்குற்றவழக்குகள் பல்வேறு நாடுகளில் தொடுக்கப்பட்டாலும் ஆஸ்திரேலியாவில் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு  இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விசாரணை தொடர அட்டர்னி ஜெனரலான ராபர்ட் மெக்கிளிலாண்ட் ஒப்புதல் தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு உரியது தான் என்று விக்டோரியா மாகாண தலைமை மாஜிஸ்திரேட் கடந்த வாரம் அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால் இந்த வழக்கு விசாரணையே ஆஸ்திரேலியா சட்டத்திற்கு புறமபானது என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மத்திய அரசிந் அனுமதியின்றி இலங்கை அதிபருக்கு எதிராக ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடரமுடியாது என்று அந்நாட்டு பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்