முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டாறு பாலம் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு உதவி

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.1 - குண்டாறு பாலத்தின்மீது நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த சின்னக்கருப்புவின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர், குண்டாறு பாலத்தில் இன்று(31.10.2011) மதுரையிலிருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், எதிரே வந்த இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சின்னக்கருப்பு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், அவரது மனைவி மற்றும் குழந்தை காயமடைந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

மேலும்,  பேருந்து பாலத்தின் மேற்குப்பக்கம் கைப்பிடிச் சுவரை இடித்துக்கொண்டு  12  அடி ஆழத்தில் குண்டாற்றுக்குள் விழுந்ததில், பேருந்தில் பயணம் செய்த 35 பேரும் காயமடைந்தனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த சின்னக்கருப்புவின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony