முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்சிங் சிங்கப்பூர் செல்ல டெல்லி கோர்ட் அனுமதி

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ.4 - சிறுநீரக சிகிச்சை செய்து கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்கு ராஜ்யசபா எம்.பி. அமர்சிங்கிற்கு டெல்லி கோர்ட் நேற்று அனுமதி அளித்தது. பாராளுமன்றத்தில் கடந்த 2008 ம் ஆண்டு மன்மோகன்சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது எம்.பிக்களுக்கு ஓட்டுப் போட லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பாரதீய ஜனதா கட்சியினர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் கட்டுக்கட்டாக நோட்டுக்களை காண்பித்து அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த வழக்கு விசாரணையில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், இந்நாள் ராஜ்யசபா எம்.பியுமான அமர்சிங் சிக்கினார். 

பின்னர் அவர் கடந்த செப்டம்பர் 6 ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான அமர்சிங் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து செப்டம்பர் 12 ம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் கடந்த அக்டோபர் 30 ம் தேதியன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். நீதிமன்ற காவலில் இருக்கும் போதே அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  

இந்நிலையில் கடந்த 24 ம் தேதியன்று டெல்லி ஐகோர்ட் அவரை மனிதாபிமான அடிப்படையிலும், அவரது உடல்நிலை கருதியும் ஜாமீனில் விடுவித்தது. அதே நேரம் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. கோர்ட்டின் முன் அனுமதி பெற்றுத்தான் எங்கும் செல்ல வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி அமர்சிங் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தான் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டதாகவும், எனவே வழக்கமான பரிசோதனைக்காக தான் அங்கு செல்ல வேண்டியது அவசியம் என்றும் அந்த மனுவில் ராஜ்யசபை எம்.பி. அமர்சிங் உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை வெளிநாடு செல்ல நேற்று அனுமதித்தது. இந்த மனுவை சிறப்பு நீதிபதி சங்கீதா திங்ரா ஷெகால் விசாரித்து அமர்சிங் சிங்கப்பூர் செல்ல அனுமதித்தார். அதன்படி வரும் 8 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை அமர்சிங் சிங்கப்பூரில் இருக்கலாம். அங்கு அவர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வெளிநாடு செல்வதற்கு முன்பு ரூ. 5 லட்சம் உறுதி பத்திரம் அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் அவருக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து அமர்சிங் வரும் 8 ம் தேதி சிங்கப்பூர் செல்வார் எனத் தெரிகிறது. எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும், முன்னாள் உதவியாளர் சுதீந்திரா குல்கர்னி, முன்னாள் பா.ஜ.க. எம்.பிக்கள் பகன்சிங், மகாபீர்சிங் மற்றும் அமர்சிங்கின் முன்னாள் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களில் சக்சேனா தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்