முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானியை கொல்ல சதி: சென்னை வாலிபர் கைது

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, நவ. 4 - அத்வானியை கொல்ல வெடிகுண்டு வைத்ததற்கு மூளையாக செயல்பட்ட பக்ரூதீனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் செல்போன் சிம்கார்டு வாங்கி கொடுத்த சென்னை வாலிபர் கைது  செய்யப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 27-​ந்தேதி 2-​ம் கட்ட யாத்திரையை மதுரையில் இருந்து அத்வானி தொடங்கினார். அவர் யாத்திரை செல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக செயலிழக்க செய்யப்பட்டது.   நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வெடிகுண்டு சம்பவம் எல்.கே.அத்வானியை குறி வைத்து நடத்தப்பட்டது என்று தெரியவந்ததை அடுத்து சிறப்பு புலனாய்வு போலீசார் சதிகாரர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர், சிறப்பு புலனாய்வு டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சதிகாரர்கள் தடை செய்யப்பட்ட அல்​உம்மா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி இமாம்அலியின் கூட்டாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. 

சிறப்பு புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலக்கப்பட்டு மதுரை நெல்பேட்டையை சேர்ந்த அப்துல்லா (26), சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத்(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.   கைதான 2 பேரும் திருமங்கலம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீnullதிபதி அனுமதித்ததையடுத்து அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல்வேறு தகவல்களை 2 பேரும் தெரிவித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் இமாம்அலியின் நெருங்கிய கூட்டாளியான மதுரை நெல்பேட்டையை சேர்ந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் உள்ளிட்ட 3 பேர் வெளிமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கேரளா, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு தனிப்படையினர் விரைந்து சென்றுள்ளனர். தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கடந்த 2002-ல் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் அல்​உம்மா தீவிரவாதிகள் இமாம்அலி, ஹைதர்அலி ஆகியோரை போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி மீட்டு சென்ற சம்பவத்தில் ஈடுபட்டவர். இவரது தந்தை சிக்கந்தர். போலீஸ் எஸ்.ஐ.யாக இருந்தவர். இதனால் பக்ருதீன் பெயரிலும் போலீஸ் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். பெங்களூரில் இமாம்அலியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட இப்ராகிம் என்பவரது மைத்துனர்தான் போலீஸ் பக்ருதீன். இவர் மீது மதுரை, வேலூர் ஆகிய பகுதிகளில் 22 வழக்குகள் உள்ளன. இமாம்அலியை மீட்டு சென்ற வழக்கில் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானார். மதுரை மாட்டுத்தாவணியில் டாஸ்மாக் மதுக்கடையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் 2 அடிதடி வழக்குகளிலும் போலீஸ் பக்ருதீன் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த போலீஸ் பக்ருதீன், எல்.கே.அத்வானியை கொல்ல சதி திட்டம் தீட்டி செயல்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. 

போலீஸ் பக்ருதீனை பிடித்தால்தான் பைப் வெடிகுண்டு தொடர்பாக முழு தகவல்களையும் பெறமுடியும் என்பதால் தனிப்படையினர் போலீஸ் பக்ருதீனை குறிவைத்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் மற்றொரு நபரான மாலிக் மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிதாஸ் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டவர். அப்போது 17 வயதான மாலிக் மைனர் என்பதால் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் nullசாரி கங்காதரன் கொலை வழக்கிலும் இவர் தேடப்பட்டு வருகிறார். போலீஸ் பக்ருதீன், மாலிக் ஆகியோர் இந்து முன்னணி பிரமுகர் ராஜகோபாலன் கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களது குற்றப்பின்னணி குறித்து மேலும் விரிவாக சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களது வழக்குகளை விசாரித்த தற்போது வெளியூர்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளிடமும் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

மேலும் வெடிகுண்டு வைத்தவர்களுக்கு உதவிய மற்றொரு நபரையும் போலீசார் மாமல்லபுரத்தில் உள்ள லாட்ஜில் வைத்து கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் பிரியாணி கடை நடத்தி வரும் அல்தாப் என்பவர் ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும், மேலும் ஒரு வழக்கிலும் கைதானவர், பின்பு திருந்தி பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். 

இந்நிலையில் வெடிகுண்டு வைத்து கைதான அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்மத் ஆகியோரின் செல்போன் சிம்கார்டுகளை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை  நடத்தியதில் அந்த செல்போனும், சிம்கார்டும் திருவல்லிக்கேணியில் உள்ள அல்தாப் பெயரில் வாங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உத்தரவின் பேரில் அல்தாப்பை பிடிக்க சிறப்பு புலனாய்வு படை முடுக்கி விடப்பட்டது. விசாரணையில் அல்தாப் குண்டு பிடிபட்டதிலிருந்து வீட்டிற்கே வருவதில்லை என தெரிய வந்துள்ளது. விசாரணையில் அல்தாப் மகாபலிபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அல்தாப்பை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அல்தாப் விசாரணைக்கு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்