முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு: சி.பி.ஐ. கோர்ட்டு

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.4 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை டிஸ்மிஸ் செய்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வருகிற 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்தமுறை கண்டிப்பாக ஜாமீன் கிடைத்துவிடும் என்று கனிமொழி மற்றும் தி.மு.க.வினர் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு இந்த முறையும் புஸ்வாணமாகிப்போனது. ஜாமீன் கிடைக்காததால் கலங்கிய கண்களுடன் மீண்டும் திகார் சிறைக்கே சென்றார் கனிமொழி. 

தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு 2 ஜி. ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவின் பதவிக்காலத்தில்தான் இந்த இமாலய ஊழல் நடந்துள்ளது. இதை அடுத்து தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ம் தேதி ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆ.ராசாவையும்,  அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த்த பெகூரா, சந்தோலியா ஆகியோரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த ஊழல் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபை உறுப்பினருமான கனிமொழி,  கலைஞர் டி.வி.  நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் உள்பட மேலும் பலரையும் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 14 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கும்படி சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டன.

கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு,  இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டது.

அதன்படி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர்களான சித்தார்த்த பெகூரா,  ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அதிபர் ஷாகீத் உஸ்மான் பால்வா, குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள் நிறுவனத்தின்  இயக்குனர்கள் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால்,  பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நவம்பர் 3 ம் தேதிக்கு அளிப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கூடியதும் அவர் தனது தீர்ப்பை  கூறினார்.

கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

கனிமொழி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களை தாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று சி.பி. ஐ.தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் கூட நீதிபதி இவர்கள் 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை வருகிற 11 ம் தேதி தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தங்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த 8 பேரும் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி மீண்டும் சிறைக்கே சென்றனர்.குறிப்பாக கனிமொழி கலங்கிய கண்களுடன் மீண்டும் சிறைக்கு திரும்பினார். 

ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து கனிமொழி உள்ளிட்ட 8 பேரும் தொடர்ந்து திகார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இ.பி.கோ. 120 பி ( கிரிமினல் சதித்திட்டம்)ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இதே போல இ.பி.கோ. 409 வது பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

கனி மொழி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago