முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி ஏன்?

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.4 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனமொழி உள்பட 7 பேரின் ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி நேற்று தள்ளுபடி செய்தார். ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததற்கு நீதிபதி தெரிவித்த அடுக்கடுக்கான காரணங்கள், 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் மிகக் கடுமையானவை. நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய வைக்கும் விதத்தில் குற்றம் நடந்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான கனிமொழி சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். மக்களுக்கான பொது நிதியை அவர் தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தி இருக்கிறார். இது மாபெரும் குற்றமாகும். 

அவரது ஜாமீன் மனுவில் சட்டப்பிரிவு 437-ன் கீழ், தான் ஒரு பெண் என்பதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் பெண் என்ற கற்பனை வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு ஜாமீன் வழங்க எந்த ஆதாரமும் இல்லை. தகுந்த முகாந்திரம் இல்லாமல் அவரை விடுவிக்க முடியாது. எனவே அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பு வக்கீல்கள் தங்களது வாதத்தின்போது முக்கிய குற்றப்பத்திரிகைக்கும், துணை குற்றப்பத்திரிகைக்கும் வித்தியாசம் இருப்பது போல் பேசினர். ஆனால் குற்றப்பத்திரிகைகளிடையே வித்தியாசம் இல்லை. சட்டத்தின் பார்வையில் எல்லாம் ஒரே குற்றப்பத்திரிகைதான். 

மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாங்கள் 5 முதல் 9 மாதங்கள் வரை ஜெயிலில் இருப்பதாக கூறியுள்ளனர். விசாரணை விரைவில் முடியாத சூழ்நிலையில் இருப்பதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் தங்கள் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஜாமீனில் விடுதலைபெற இது தகுதியான காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதுபற்றி நான் மிகவும் கவனமாக ஆய்வு செய்து பார்த்தேன். சில குறிப்பிட்ட வழக்குகளில் சூழ்நிலைகள் பொருந்தி வரும்போது பல மாதமாக சிறையில் உள்ளோம் என்ற காரணம் பொருத்தமாக இருக்கும். ஆனால் சில வழக்குகளுக்கு இந்த வாதம் பொருந்தாது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 409-ன் கீழ் நம்பிக்கைத் துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிக மிக கடுமையான சட்டப்பிரிவாகும். இந்த பிரிவின்கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கொடுக்க முடியும். இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக எந்த மாற்றமும் செய்ய இயலாது. எனவே அனைவரது ஜாமீன் மனுக்களையும் இந்த கோர்ட்டு நிராகரித்து உத்தரவிடுகிறது. 

இவ்வாறு நீதிபதி ஓ.பி.ஷைனி கூறினார். 

நீதிபதி சைனியின் இந்த அதிரடி தீர்ப்பைக் கேட்டதும் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கண் கலங்கினர். இந்தி படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் கண்ணீர் மல்க நின்றனர். தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டதும் கனிமொழி உள்பட 8 பேரும் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்