முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசன் அலியின் சொத்துக்களை முடக்க முடிவு

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. நவ.5 - கறுப்பு பண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலி கான் மற்றும் அவரது கூட்டாளி காசிநாத் தபூரியா ஆகியோரின் ரூ. 50 கோடி சொத்துக்களை முடக்க மத்திய அமலாக்க பிரிவு முடிவு செய்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தையும் இந்த அதிகாரிகள் முறைப்படி பெற்றுள்ளனர். எனவே இந்த சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று தெரிகிறது. புனேயை சேர்ந்த குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலி கான் என்பவரும் அவரது கூட்டாளியான காசிநாத் தபூரியா என்பவரும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இது குறித்து விசாரணை நடத்திய வருமான வரித்துறை மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஹசன் அலி மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த காசிநாத் தபூரியா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனைகளை ஏற்கனவே நடத்தினர்.

ஹசன் அலி கான் ரூ.50,329 கோடியும் அவரது மனைவி ரீமா ஹசன் அலி ரூ.49 கோடியும், காசிநாத் தபூரியா ரூ. 591 கோடியும், தபூரியாவின் மனைவி சந்திரிகா ரூ.20,540 கோடியும்,தபூரியாவால் தோற்றுவிக்கப்பட்ட ஆர்.எம். இன்வெஸ்ட்மென்ட் அன்ட் டிரேடிங் கம்பெனி ரூ. 336 கோடியும் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து ஹசன் அலி, காசிநாத் தபூரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் 2 பேரும் தற்போது மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள இவர்கள் இருவரின் அசையா  சொத்துக்களை பறிமுதல் செய்ய மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முறையான ஒப்புதலை அட்ஜூடிகேசன் அத்தாரிட்டியிடமிருந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

மும்பையில் உள்ள ஹசன் அலியின் சொத்துக்கள் ( மெர்சிடிஸ், போர்சி உள்ளிட்ட விலை உயர்ந்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர கார்கள் உள்பட )  மற்றும் புனேயில் உள்ள அவரது  பங்களாக்கள், மும்பையில் உள்ள அவரது வீடுகள்,  டெல்லி பிரிதிவிராஜ் ரோட்டில் உள்ள தபூரியாவின் தபூரியாவின் சொத்துக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 50 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

முறையான ஆவணங்கள் கிடைத்ததும் இந்த சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று அமலாக்கப்பிரிவு  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்