முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வுக்கு இடதுசாரிகள் கண்டனம்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.5 - பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. பெட்ரோல் விலையை, லிட்டருக்கு ரூ 1.82 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி இந்த பெட்ரோல் விலை உயர்வை இந்திய எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொலீட் பீரோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அத்யாவசிய பொருட்களின் விலைகள் அபரிவிதமாக அதிகரிக்கும் என்றும், நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதாக மத்திய அரசு காரணம் கற்பிக்கிறது. ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் அண்மை காலத்தில் கச்சா எண்ணையின் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இப்போது மீண்டும் ஒரு முறை மக்களின் மீது அதிர்ச்சி சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உணவு பொருள் பணவீக்கம் ஏற்கனவே 12.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்யாவசிய பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்த மாநில இடதுசாரி அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போல வலது கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உணவுப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். இது சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அடி என்று வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா காட்டமாக கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்