முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு: பாரதீய ஜனதா கருத்து

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 5 - பெட்ரோல் விலை உயர்வு நள்ளிரவு மோசடி என்று பா.ஜ.க. கூறியுள்ளது. நாட்டு மக்களுக்கு எதிராக வெவ்வேறு விதமான தீவிரவாதத்தை காங்கிரஸ் கட்சி கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பார் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பணவீக்கம் அதிகளவில் இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறுகையில், எண்ணெய் நிறுவனங்களே விலைகளை நிர்ணயிக்கலாம் என்ற அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. உணவு பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும் போது மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இது சாமானிய மக்கள் மீது தொடுக்கப்படும் மற்றொரு தாக்குதலாகும். இந்த விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தும் என்றார். பெட்ரோல் விலையை உயர்த்திருப்பதால் மத்திய அரசு மீண்டும் உணர்வற்ற முறையில் நடந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் நிலோத் பலபாசு கூறியுள்ளார். 

பெட்ரோல் விலை உயர்வை குறைப்பதற்கு தேவையான வழிகளை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு வருத்தமளிக்கிறது. சாதாரண மக்களின் பிரச்சினைகளை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த விலை உயர்வினால் அவர்கள் மீது சுமத்தப்படும் சுமை குறைந்தபட்சமாக இருக்கும் வகையிலான வழியை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியுள்ளார். மாநிலங்கள் தங்களது வரிகளை குறைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகல்ராய் கூறுகையில், இந்த விஷயம் தொடர்பாக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். பெட்ரோல் விலையை அரசு நிர்ணயிப்பதில்லை என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா கூறினார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்சு சென்ற அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது அரசுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்