தலைமை தேர்தல் கமிஷனர் கருத்துக்கு வரவேற்பு

Image Unavailable

 

மும்பை, நவ.6 - எம்.பிக்களை திரும்பப் பெறும் உரிமை என்ற முறையை கொண்டு வந்தால் அது நாட்டை சீர்குலைத்து விடும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அன்னா ஹசாரே குழுவினரின் கருத்தை அத்வானி ஏற்றுக் கொள்ளவில்லை. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. ஜங்லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 2 வாரம் உண்ணாவிரதம் இருந்தவர்தான் ஹசாரே. சமீபத்தில் இவர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். எம்.பிக்களை திரும்பப் பெறும் உரிமைக்கு ஆதரவாக அன்னா ஹசாரே குழுவினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, இதை ஏற்கவில்லை. இந்த முறையை கொண்டு வந்தால் நாடு சீர்குலைந்து விடும் என்று அவர் கருத்து கூறியிருந்தார். இதை எல்.கே. அத்வானியும் வரவேற்றுள்ளார். 

இந்தியா போன்ற பெரிய நாட்டில் எம்.பிக்களை திரும்பப் பெறும் உரிமையை கொண்டு வந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த நாடே சீர்குலைந்து விடும். எனவே குரேஷியின் கருத்தை இந்த விஷயத்தில் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அத்வானி கூறியுள்ளார். உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்றும் அத்வானி தெரிவித்தார். சிறிய நாடுகளில் வேண்டுமானால் இது நடக்கலாம். 

ஆனால் மற்ற நாடுகளில் இது சாத்தியமல்ல. எனவே திரும்பப் பெறும் உரிமை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று அத்வானி திட்டவட்டமாக தெரிவித்தார். அதே நேரம் தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வரலாம் என்றும் அத்வானி யோசனை தெரிவித்தார். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் கறுப்பு பணத்தை பயன்படுத்துவதை தடுப்பது, அரசியலில் கிரிமினல்கள் ஊடுருவதை தடுப்பது போன்றவற்றை செய்யலாம் என்றும் அத்வானி யோசனை தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தம் பற்றி வாஜ்பாய் குறிப்பிட்டதையும் அத்வானி சுட்டிக்காட்டினார். தேர்தல் சீர்திருத்தம் விரைவில் செய்யப்பட வேண்டும். அவற்றை முறையாக அமல்படுத்தினால் தேர்தலில் பணபலத்தை தடுக்கலாம் என்றும் அத்வானி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ