பா.ஜ.க. ஆதரவு இல்லாவிட்டால் ஹசாரேவுக்கு ராம்தேவ் கதிதான்!

Image Unavailable

பனாஜி, நவ. - 7 - பா.ஜ.க ஆதரவு கிடைக்காமல் இருந்திருந்தால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான் ஹசாரேவுக்கும் ஏற்பட்டிருக்கும் என்று பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.  ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வரும் ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். ஹசாரே உண்ணாவிரதத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆதரவு அளித்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். உடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று ஹசாரே மறுத்து வருகிறார். ஊழலுக்கு எதிராக யார் ஆதரவு கொடுத்தாலும் அதை ஏற்க தயாராகி இருக்கிறோம்.  அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் உண்ணாவிரதம் மற்றும் இதர போராட்டங்களுக்கு அவர்களது உதவியை நாங்கள் ஒருபோதும் நாடியதில்லை என ஹசாரே விளக்கமளித்தார். இந்நிலையில் 19 நாள் மவுன விரதத்துக்கு பின்பு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஹசாரே, ஊழல் விவகாரத்தில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஒன்று பட்டதாரி என்றால் மற்றொன்று முதுகலை பட்டதாரி என்றார். அவரது இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது, எங்களது ஆதரவு கிடைக்காமல் இருந்திருந்தால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான் ஹசாரேவுக்கும் ஏற்பட்டிருக்கும். அழைப்பு இல்லாமல் எந்த இடத்துக்கும் நாங்கள் செல்ல மாட்டோம். பா.ஜ.க. குறித்தும், ஆர்.எஸ்.எஸ். குறித்தும் ஹசாரே கூறிய கருத்து வருத்தமளிக்கிறது. ஹசாரே நல்ல நோக்கத்துக்காக போராடுகிறார். அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்றார் கட்காரி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ