கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது: அப்துல்கலாம்

Image Unavailable

நெல்லை நவ-- 7 - கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சென்று அணுஉலைகள்பாதுகாப்பு குறித்து இந்திய அணுமின் கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் மற்றும் விஞ்ஞானிகளுடன்  ஆலோசனை நடத்தினார். பின்னர் அணுமின்நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் பொறியாளர்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். குறிப்பாக கடல்நீரை சுத்திகரிக்கும் பிளான்ட், பாதுகாப்பு சுவர்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து மீண்டும் கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கூடங்குளம் அணுமின்நிலையம் மூன்றாவது தலைமுறைக்கான அனைத்து நவீன பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. அணுஉலைகளை ஆய்வுசெய்து பார்த்ததில் பாதுகாப்புகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் உயர் தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணுஉலையில் மின்தடை ஏற்பட்டாலோ, குளிர்விப்பான்கள் செயல் இழந்தாலோ தானாகவே அணுஉலைகளை குளிர்விக்கசெய்யும் நவீனதொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பம் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. முதன்முதலில் இந்த தொழில்நுட்பம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அணுகசிவு ஏற்பட்டால் அணுஉலைக்குளளேயே சீர்செய்யும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிறைந்த இரண்டு அடுக்கு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம்தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம். மின்சாரம் இருந்தால்தான் நாட்டின் எல்லா வளத்தையும் பலப்படுத்த முடியும். அணுக்கழிவுகள் 75 சதவிகிதம் மறுசுழற்சி செய்து பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். 25 சதவிகித அணுக்கழிவுகளே நவீன தொழில் நுட்பத்துடன் வெளியேற்றப்படும். அணுக்கழிவுகள் எந்தவிதத்திலும் கடலில் கலக்கப்படமாட்டாது. பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இங்கிருந்து மின்சாரம் வழங்கப்படும் நிலை ஏற்படும். கூடங்குளம் அணுசக்தி பூங்காவாக செயல்படும். கூடங்குளம் அணுமின்நிலையம்குறித்து என்னை சந்தித்து  சந்தேகம் கேட்டால் அதனை தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். 4விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட்ட பின்னரே அணுஉலை பாதுகாப்பு சிற்பாக உள்ளது என தெரியவந்துள்ளது. எனவே கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. மக்கள் போராடத்தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ