முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, நவ. - 10 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மற்றும் நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட் அது தொடர்பாக சி.பி.ஐ.க்கு அதன் பதிலை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  நாட்டிலேயே மிகப் பெரிய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலாகும். இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் பின்னாளில் கைது செய்யப்பட்டு அவர்களும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி கோரி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியசுவாமிக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான ஆவணங்களின் நகலை வழங்குமாறு சி.பி.ஐ.க்கு அதன் சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளது. அதை நிரூபிக்க தனக்கு ஆவணங்களின் நகல் தேவை என்று நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது வாதத்தை ஏற்று அவருக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களின் நகலை வழங்குமாறு நீதிபதியும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. தன்னை ஜாமீனில் விடக் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த 4 மனுக்களும் (4 முறை) நிராகரிக்கப்பட்டன. கடந்த நவம்பர் 3 ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஒரு பெண் என்ற காரணத்திற்காக அவரை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று சி.பி.ஐ. நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி, தன்னை ஜாமீனில் விடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் ப்ரூட்ஸ் அண்டு  வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் மற்றும் பாலிவுட் பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரும் டெல்லி ஐகோர்ட்டை அணுகினர். இவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி.கே. ஷாலி, இது தொடர்பாக சி.பி.ஐ.யின் விளக்கம் கேட்டு அதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். முன்னதாக கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அல்டாப் அகமது வாதிடுகையில், கனிமொழிக்கு ஜாமீன் தருவதை சி.பி.ஐ. எதிர்க்கவில்லை. ஆனாலும் விசாரணை நீதிமன்றம் சி.பி.ஐ. யின் விருப்பத்தை புறக்கணித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். அப்போது சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் மோகன்பராசரன் ஆஜரானார். அப்போது கூறிய அவர், கனிமொழிக்கு ஜாமீன் தருவதில் சி.பி.ஐ.க்கு ஆட்சேபனை இல்லை என்பதை சுட்டிக் காட்டினார். இது பற்றி மேலும் கூறிய அவர், ஏற்கனவே சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நாங்கள் எங்களுடைய நிலையை வலியுறுத்தி கூறி விட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பராசரன் கூறினார். இந்த விஷயத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று நீதிபதி ஷாலி கேட்டதற்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார். பிறகு நீதிபதி வி.கே. ஷாலி சி.பி.ஐ.யின் பதில் கேட்டு அதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். டிசம்பர் 1 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சி.பி.ஐ.யின் பதில் கிடைத்த பிறகு கனிமொழிக்கும் மற்றும் நால்வருக்கும் ஜாமீன் கிடைக்குமா?  கிடைக்காதா? என்பது தெரிந்து விடும்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்