ஹசாரேவுடன் எங்களுக்கு தொடர்பு உண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் திட்டவட்டம்

Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 12 - அன்னா ஹசாரேவுடன் எங்களுக்கு நீண்டகால தொடர்பு உண்டு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ராவ் பகவத் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அன்னா ஹசாரே மறுத்துள்ளார்.  ஊழலுக்கு எதிராக வலுவான சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போர்க்கொடி உயர்த்தியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் 13 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அவரது கோரிக்கையில் ஓரளவு வெற்றியும் பெற்றார். அவரது கோரிக்கைக்கு மத்திய அரசு பணிந்தது.  இந்நிலையில் அன்னா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதனை அன்னா ஹசாரேவும், பாரதிய ஜனதா கட்சியும் மறுத்து வருகின்றன.  இந்நிலையில் எங்களுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் மிக நீண்ட காலமாக தொடர்பு இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதனை நாங்கள் ஏற்போம் என்று தெரிவித்தார். அன்னாவின் போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்பதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் ஹசாரேவுக்கும் நீண்டகாலமாகவே தொடர்பு உண்டு. கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் எங்களுக்கு ஹசாரே உதவினார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இதனை அன்னா ஹசாரே மறுத்துள்ளார். எனக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் எந்தத் தொடர்பு கிடையாது. நான் யாரென்று எல்லோருக்கும் தெரியும். நான் ஆர்.எஸ்.எஸ்சின் உதவியைப் பெறவேண்டிய அவசியமே இல்லை என்றும் ஹசாரே தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ