ஞான தேசிகன் தேர்வு பின்னணியில் ராகுல் காந்தி

Image Unavailable

சென்னை, நவ.13- ஞான தேசிகன் தேர்வு பின்னணியில் ராகுலின் செயல்பாடுகள் உள்ளது தெரியவந்துள்ளது. தமிழக காங்கிரசின் தலைவராக இருந்த தங்கபாலு தனது பதவி காலத்தில் தி.மு.க.வின் ஜால்ராவாகவே மாறிபோனது ஊரறிந்த விஷயம். துக்ளக் ஆசிரியர் சோ ஒரு தடவை வேடிக்கையாக குறிப்பிட்டது போல் தங்கபாலு தரப்பினர் தி.மு.க.வில் உள்ள காங்கிரஸ் கோஷ்டி என்பது போல் தி.மு.க. அடிமட்ட தொண்டனை விட விசுவாசியாக தங்கபாலு மாறிபோனார். சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்த தங்கபாலு மயிலாப்பூரில் தனது மனைவியையே நிற்கவைத்து வேட்பு மனுவில் குளறு படி செய்து மாநில தலைவராக இருந்தும் மாற்றுவேட்பாளராக அறிவித்து கொண்டு தனது மனைவியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் தன்னை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்து கொண்டு காமெடி பண்ணினார். அதற்கு முன்பு பாராளுமன்ற தேர்தலில் பாரம்பரயமிக்க காங்கிரஸ் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியை தி.மு.க.வுக்கு தாரை வார்த்து கொடுத்தார். கட்சிக்குள் யாரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியாத தலைவராக இருந்தார். அவரை தலைவர் பதவியிலிருந்து மாற்றவேண்டும் என்று பல ஆண்டுகளாக காங்கிரஸ் தரப்பில் மனுக்கள் மேல் மனுக்கள் குவிந்தபோதும் காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை. இடையில் தலைவர் மாற்றம் வருகிறது என்றார்கள் சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவரை மாற்றாமல் தலைமை நீட்டித்து வந்தது. இடையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தலைவராக மாற்ற தலைமை நினைத்தது. ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எப்போது எதை பேசுவார் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே அவரை போடுவதிலும் தயக்கம் காட்டினர். சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் தங்கபாலு விலகல் கடிதம் கொடுத்த உடனேயே வாசனை தலைமை ஏற்கும்படி மேலிடம் கேட்டுகொண்டபோது அ.தி.மு.க. பெருவாரி வெற்றி பெற்றுள்ள சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கும் சூழ்நிலையில் தலைவராக பொறுப்பேற்று தோல்விக்கு பொறுப்பேற்க வாசன் தயாராக இல்லாததால் மறுத்துவிட்டார். அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் வந்தது. அதில் காங்கிரஸ் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் மீண்டும் தலைவர் பதவியிலிருந்து தங்கபாலுவை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ப.சிதம்பரம் தனது தரப்பில் கே.எஸ்.அழகிரியை தலைவராக்க கடும் முயற்சி செய்தார். எந்ததரப்பிலும் சாராத சிதம்பரத்தின் சொந்த ஊர்க்காரரான சுதர்சன நாச்சியப்பனுக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் சிதம்பரம் அதற்கு ஒத்து கொள்ளவில்லை. இதனிடையே தமிழக காங்கிரஸ் வலுவான ஆதரவாளர்களை இளைஞர் அமைப்புகளை கொண்ட வாசன் தரப்பில் யாரையாவது கொண்டு வந்தால் தான் கட்சியை எளிதாக வழிநடத்த முடியும் என்ற எண்ணத்தில் மேலிடம் இருந்தது. சோனியா காந்தியின் உடல்நிலை சரியில்லாத நிலையில் ராகுல்காந்தி விரைவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க உள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தை வளர்க்க ராகுல் எடுத்த முயற்சிக்கெல்லாம் கருணாநிதியின் ஆதரவு பெற்ற தங்கபாலு முட்டுகட்டையாகவே இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தமிழகத்தில் படுதோல்வியை தழுவியது. தே.மு.தி.க.வும் தோல்வி அடைந்த நிலையில் தி.மு.க.வை நம்பி பயனில்லை என்ற நிலையில் காங்கிரஸ் தமிழகத்தில் துளிர்க்கவும் அடுத்து வரும் பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறவேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவராக வரவுள்ள ராகுலின் திட்டம்.
வாசனின் முக்கிய ஆதரவாளர் ஞானதேசிகன் அனைத்து தரப்பு தலைவர்களாலும் ஏற்று கொள்ளப்பட்டவர். அமைதியானவர் குறிப்பாக ஆளுங்கட்சிக்கும் முதல்வரிடமும் நல்ல நட்பு முறையில் பழக கூடியவர். செய்தியாளர்கள், இளைஞர் காங்கிரசாரிடமும் மற்ற கோஷ்டி தலைவர்களையும் அனுசரித்து போத கூடியவர். ஆகவே தற்போதுள்ள சூழ்நிலையிலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் எதிர்காலத்தை முன்னிட்டும் ராகுல் காந்தியும் வாசனும் எடுத்த தெளிவான முடிவு இது என்று கூறப்படுகிறது. தமிழக தலைவராக ஞானதேசகன் நியமிக்கப்பட்டதன் மூலம் மீண்டும் ஒரு முறை வாசன் வென்றிருக்கிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ