முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி யாரால் என்பது உள்ளாட்சி முடிவில் நிரூபணம் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளக்கம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், நவ.14- எங்களால் தான் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது என்று இருமாப்பு காட்டிய எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவின் மூலம் மக்கள் அதற்கு சரியான பதிலளித்துள்ளனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.சீனிவாசன் விளக்கம் அளித்து பேசினார். திண்டுக்கல் வி.கே.எஸ். மகாலில் தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமை தாங்கி கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் சாணக்கியத்துடன் செயல்பட்டு தனியாக போட்டியிட முடிவெடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பரீட்சித்து பார்க்க வேண்டும். கடந்த 5 மாத அ.தி.மு.க. நல்லாட்சிக்கு மக்கள் என்ன பரிசு வழங்கப் போகிறார்கள்? என்பதற்காகவே கூட்டணி வேண்டாமென முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார். நமது கட்சியில் உள்ள தலைவர்கள் கூட்டணியை எதிர்பார்த்தார்கள். ஆனால் தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீர்க்கமான முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டார். 

அதன் பலனாக 10 மாநகராட்சி மேயர் பதவிகள், ஏராளமான இடங்களில் நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகள், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றது.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எங்களால் தான் மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது என பல்வேறு எதிர்க்கட்சிகள் இருமாப்பு செய்து வந்தனர். அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு 37 சதவீத மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா எடுத்த மிகச்சரியான முடிவே இதற்கு காரணமாக  அமைந்தது. இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியின் தலைவர்களும்  கட்சியைக் கலைத்து விட்டு முதல்வர் ஜெயலிலதாவை நோக்கி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.  இனி யாராலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்பதை உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளது. புதிதாக இணைபவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதையும் கட்சி பொறுப்பும் வழங்கப்படும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில்  மதுரை மாநகராட்சி துணை மேயர் கோபாலகிருஷ்ணன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி, நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ், நகரச் செயலாளர் ராமுத்தேவர், நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் பி.ஜி.எம்.துளசிராம்,  பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நாகரத்தினம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பழக்கடை நாகராஜன், சுப்பிரமணி, அப்துல் ரஹீம், இக்பால், சேவியர், ராமலிங்கம், வி.டி.ராஜன், சோனா சுருளி, சக்திவேல் மற்றும் அகரம் பேரூராட்சி துணைத்தலைவர் சக்திவேல், கவுன்சிலர் அமாவாசை, தாடிக்கொம்பு பேரூர் கழக செயலாளர் முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட மாவட்ட, நகர ஒன்றியக் கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்