முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி - பாபநாசம் அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.15 - விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு 16-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். 

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாயின் புதிய பாசனப் பகுதிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு அமராவதி நீர்த்தேக்க பிரதான கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாய பெருமக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாய பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று 16.11.2011 முதல் அமராவதி அணையிலிருந்து  பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

விழுப்புரம் மாவட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விழுப்புரம் மாவட்ட விவசாய பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

விவசாய பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று 16.11.2011 முதல் விழுப்புரம் மாவட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து 29 நாட்களுக்கு மழைய மற்றும் புதிய பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

விவசாய பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று 16.11.2011 முதல் பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து 120 நாட்களுக்கு தாமிரபாணி பாசன அமைப்பிலுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்