முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் கடத்தலை ஒடுக்க வேண்டும்: முதல்வர்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.15 - மூதாட்டிகள் கொல்லப்படுவதை தடுக்கவும், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நேற்று நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். சென்னையில் நேற்று நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த மாநாட்டில் உரையாற்றுவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது உங்களுக்கும், எனக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல் ஆகும். முந்தைய என்னுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் என்னுடைய செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள்.

காவல் துறையின் பெரும்பாலான அதிகாரிகள் குறித்து நான் நன்கறிவேன். இதற்கு முன்னர் நாம் இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பு அளித்தது போலவே தொடர்ந்து செயல்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

காவல்படை என்பது மாநிலத்தினுடைய அதிகாரத்தின் கண்கூடாகத் தெரிகிற ஓர் அடையாளம் ஆகும். காவல்துறையின் மீது பாமர மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதை உறுதிசெய்வது நமது அனைவரின் ஒருமித்த முயற்சியாகும்.

நம் மாநில மக்களுக்கு, பாதுகாப்பான அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தருவது முதன்மையான முயற்சியாகும். பெரும்பாலன இல்லங்களில் மீண்டும் அமைதி திரும்பும் வகையில், நில அபகரிப்புப் புகார்களுக்கு எதிரான ஒப்பற்ற உங்களுடைய செயல்பாட்டை நான் பாராட்டியே ஆக வேண்டும். இதுவரை ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை தொடர்புடைய சம்பவங்கள் மிகத் திறமையாகக் கையாளப்பட்டுள்ளன. எல்.கே.அத்வானி பயணத்தின்போது திருமங்கலம் அருகே வைக்கப்பட்டிருந்த நவீன குழாய் வெடிகுண்டுகளை தக்க நேரத்தில் கண்டறிந்ததன் மூலம் பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது குறித்து எனக்கு ஏற்பட்ட நிம்மதியை உங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும்.

பின்வருவன குறித்து உங்களுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று விழைகிறேன்.

கடுமையான  கிரிமினல்களும், ரவுடிகளும் இன்னும் பெருமளவில் இருந்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தலை நாம் தடுத்தாக வேண்டும்.

உயிருக்கும், உடைமைகளுக்கும் பேராபத்து மீண்டும் மீண்டும் தழைத்து வருவதை அடியோடு ஒடுக்கவும் ஒழிக்கவும் வேண்டும். வயதான பெண்களை கொலை செய்வது, குழந்தைகளை கடத்திச் செல்வது முதலிய சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். மகளிர் தொடர்பான குற்றங்கள் அறவே இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

சங்கலி பறிப்பு, வணிக நிறுவனங்களை உடைத்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள், ஏனைய துணிகர கொள்ளைச் சம்பவங்கள், சென்னை மாநகரில் பெருமளவில் நடைபெறுகின்றன. பேராசையின் காரணமாக இத்தகைய சம்பவங்கள் சமுதாயத்தின் ஒரு பக்கத்தில் நடைபெற்று வருகிறபோது காவல்துறையின் உறுதியான, திறமையான விழிப்புப் பணியுடன் கூடிய, திறம்பட்ட நடவடிக்கை மூலம் இத்தகைய செயல்களைத் தடுப்பது காவல்துறையின் கடமையாகும்.

சாலை விபத்துகளின்போது ஏற்படுகின்ற பெரும்பாலான மரணம் குறித்து நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன். இத்தகைய மிகப்பெரிய உயிரிழப்பின் காரணமாக, விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏற்படுகிற பெருந்துயரம் உடனடியாகத் தணிக்கப்படவேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், கவனக்குறைவாக வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பது தவிர்க்க இயலாததாகும்.

கள்ளச்சாராயமும், போலி மது விநியோகமும் குறைந்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உளவுத்துறைத் தகவல்களைச் சேகரித்தல், திடீர் சோதனை நடத்துதல், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் உள்ளூர் காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, வருவாய்த்துறையினர் ஆகியோருக்கிடையே பெரிதும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது அவசியமாகும்.

காவல்துறையினரின் நவீனமான நடைமுறைகளைக் காட்டிலும் மிகவும் நுட்பமான முறையில் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். அத்தகைய குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு, காவல்துறையினருக்கு, தொடர்ச்சியான நவீன பயிற்சியும், நுண்ணறிவும் தேவைப்படுகிறது. இதை நிறைவேற்றும் வகையில் காவல் துறையினருக்குப் பயிற்சியும், புத்தாக்கப்பயிற்சியும் அளிப்பதற்கு ஒருமித்த முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் அவசியமாகும்.

சமுதாயத்திற்கு எதிராக ஏற்படுகின்ற வன்முறைச்செயல்களைக் கண்டறிந்து, குற்றங்களை, திறன்பட்ட முறையில் தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கை செவ்விய முறையில் பராமரிப்பதில் உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை நல்குவீர்கள் என்று நான் நம்புகிறேன். எனக்காகவும், நமது மாநிலத்திற்காகவும் நான் வகுத்துள்ள நோக்கங்களுடன் உங்களுடைய நோக்கங்கள் ஒத்திசைவாக இருக்குமென்று நான் நம்புகிறேன். சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் மற்றும் தொடர்புடைய காவல்பணியிலும் முதலிடத்தை அடைவதற்காக, மாநிலஅரசிற்கு உதவி செய்வதில், தமிழ்நாடு காவல்துறை தனித்தன்மை பெற்றுள்ளதாக நம்புகிறேன்.

காவல்துறையினருக்கான நலத்திட்டங்களுக்கு, நான் ஒருபோதும் கட்டுப்பாடு விதித்ததில்லை. நான் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்க தயாராக இருக்கிறேன்.  கணினி வழிக்குற்றங்கள் முதற்கொண்டு, நாகரீகமான போர்வையில் செய்யப்படுகின்ற குற்றங்கள் வரையில் சட்டத்திற்கு புறம்பான பிற நடவடிக்கைகள் உட்பட பல பிரச்சனைகள் நம்முன் உள்ளன.

அரசின் முன்னுரிமைத்திட்டங்களுக்கு நாம் அனைவருமே பொறுப்பாவோம். உங்களுடைய பணிக்காலத்தில் சிறந்தவற்றையே செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதுடன், உங்களுடைய பணிகளை செம்மையான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விழைகிறேன்.காலத்தின் அருமை கருதி என் உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்